தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கபட்ட பகுதிகளில் ஆர்எஸ்எஸ் சேவாபாரதி சார்பில் தொடர்ந்து உணவு விநியோகம்

R.S.S

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கபட்ட பகுதிகளில் ஆர்எஸ்எஸ் சேவாபாரதி சார்பில் தொடர்ந்து உணவு விநியோகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17.12.2023 அன்று ஏற்பட்ட கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்படைந்தது. தொடர் கனமழையினால் வீடு மற்றும் உடைமைகளை இழந்த மக்களை மீட்கும் பணியிலும் அவர்களுக்குத் தேவையான உணவு வழங்கும் பணியிலும் ஈடுபடுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆர்எஸ்எஸ் சேவாபாரதியின் தன்னார்வ தொண்டர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு தூத்துக்குடி ராசி திருமண மண்டபத்தில் நிவாரண முகாம் துவங்கப்பட்டது. முதலில் கோவில்பட்டியில் இருந்து உணவு தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. 

அதைத் தொடர்ந்து தூத்துக்குடி  ஸ்ரீ சங்கரா அன்பு இல்லம் மற்றும் முத்தையாபுரம் பாரதிநகர் சேவாலயாவில் வைத்து உணவுப் பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.  தூத்துக்குடியில் 31 இடங்களிலும் திருச்செந்தூரில் 12 இடங்களிலும் உணவு தயாரிக்கப்பட்டது.  தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் வெள்ளம் பாதிக்கப்பட்டு தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த பல்வேறு பகுதிகளுக்கு படகுகள், டிராக்டர்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் நேரடியாக இரண்டு லட்சத்து 25 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள்  விநியோகம் செய்யப்பட்டுள்ளது.  

மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தனர். தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் 75 டன் அரிசி, 74442 தண்ணீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டது.  98 பகுதிகளுக்கு நேரடியாக உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அரிசி, பருப்பு, பலசரக்கு, காய்கறிகள், குடிநீர், போர்வை, பாய், நாப்கின், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, தீப்பெட்டி அடங்கிய தொகுப்புகள் 10,311 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவைப் பணியில் ஆர்எஸ்எஸ் சேவா பாரதியின் 1170 தன்னார்வத் தொண்டர்கள் பங்கேற்றனர். 4படகுகள், 7 போயா படகுகள், 12 டிராக்டர்கள், 3 ஆம்புலன்ஸ்கள், 4 தண்ணீர் டிராக்டர்கள், 25 சரக்கு வாகனங்கள் உபயோகப்படுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி பெண்கள், வயோதிகர்கள் உட்பட 35 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடியில் இதுவரை 12 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 1254 நபர்கள் பயனடைந்தனர். இருசக்கர வாகன பழுது நீக்கும் முகாம் நடத்தப்பட்டு 60 வாகனங்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டன. 4தண்ணீர் டிராக்டர்கள் மூலம் 72 ஆயிரம் லிட்டர் குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட சேவாபாரதி அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது.

RSS சங்கசாலக் சீதாராமன், ஜெயகுமார், சேவாபாரதி டிரஸ்டி சின்னபாலன்,  மாநில செயலாளர் வெண்ணிமாலை, மாவட்ட செயலாளர் பாபா குருக்கள், இந்து முன்னணி நிர்வாகிகள் இசக்கிமுத்துகுமார், ராகவேந்திரா ஆகியோர் ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.