ஆளுநர் – தமிழக அரசு மோதல்: அரசியலமைப்பு மரபா? அரசியல் வாதமா?
Tamil nadu
தமிழக திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடுகள் இருந்து வருவது அரசியல் வட்டாரங்களில் அறிந்த விஷயமே. அந்த மோதல், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூடிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் உச்சத்தைத் தொட்டது.
ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் உரை நிகழ்த்துவதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி அவைக்கு அழைக்கப்பட்டார். மரபுப்படி, சபாநாயகர் அப்பாவு அவருக்கு வரவேற்பு அளித்து உரை நிகழ்த்த அழைப்பு விடுத்தார். அனைவருக்கும் பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த ஆளுநர், தேசிய கீதம் பாடாதது குறித்து தனது அதிருப்தியை சபாநாயகரிடம் வெளிப்படுத்தினார். அதற்கு சபாநாயகர், “தமிழக சட்டமன்ற மரபுப்படி, கூட்டத் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்; கூட்டம் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்படும். இதனை மாற்ற இயலாது. தயவுசெய்து உங்களுக்காக தயாரிக்கப்பட்ட உரையை வாசியுங்கள்” என்று கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் நடந்த சூழலில், ஆளுநர் திடீரென உரையை வாசிக்காமல் சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார்.
ஆளுநர் அவைக்கு வந்தது முதல் அவர் வெளியேறும் வரை அந்த நிகழ்வுகள் வீடியோ, ஆடியோ எதிலும் நேரடி ஒளிபரப்பாக வெளியிடப்படவில்லை. இந்த இடைவெளிக்குப் பின்னர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசத் தொடங்கியதும் தான் ஊடகங்களுக்கு ஒளிபரப்பு வழங்கப்பட்டது. இதுவும் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநரின் செயல் அரசியலமைப்பு மரபுகளுக்கு எதிரானது. சட்டமன்றத்திற்கு அவமரியாதை செய்யும் வகையிலானது என்று விமர்சித்தார். மேலும், “ஆளுநர் உரை தொடர்பான அரசியலமைப்பு சட்டப்பிரிவு (176) நடைமுறைகளை தெளிவுபடுத்தவும், தேவையெனில் திருத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்று கூறியதோடு, ஆளுநர் உரை நடைமுறையில் மாற்றங்கள் தேவை என்ற அளவிற்கு பேசினார்.
இது குறித்து தேசியவாதிகள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுவது: அரசியலமைப்பின் வழிமுறை என்பது ஆளுநர் சட்டமன்றத்தில் பேசும் உரை மாநில அரசின் கொள்கைகளைப் புகழும் விளம்பர உரையாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆளுநர், மாநில மற்றும் தேசிய நலன் இரண்டையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டியவர். சட்டமன்றத்தில் வாசிக்கப்படும் உரையின் வரைவு முன்கூட்டியே ஆளுநருக்கு அனுப்பப்பட வேண்டும்; அதில் மாற்றங்கள் இருந்தால் விவாதித்து இறுதி செய்ய வேண்டும். ஆனால், தமிழக அரசு இதனை “சடங்குப் போல” செய்து, ஆளுநர் கேள்வி எழுப்பினால் அவர் தான் தவறு செய்தார் என்ற தோற்றத்தை உருவாக்க முயல்கிறது என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த சூழ்நிலையை காரணம் காட்டி ஆளுநர் உரையே தேவையற்றது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். முதல்வரின் இத்தகைய கருத்தை தேசிய வாதிகள் கண்டித்து வருகின்றனர். ஆளுநரும், ஜனாதிபதியும் மத்திய – மாநில அரசுகளை இணைக்கும் அரசியலமைப்பு கருவிகள். மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், தேசிய அளவில் ஏற்படுத்தும் விளைவுகளை மதிப்பீடு செய்வதே ஆளுநரின் பொறுப்பு. இதனை “மாநில அரசின் அதிகாரத்தில் தலையீடு” என்று பார்க்கக் கூடாது என்பதாகும் என்று கருத்து சொல்கின்றனர் தேசியவாதிகள்.
மேலும் அவர்கள், சிலர் நினைப்பதுபோல் மாநிலங்களின் கூட்டமைப்பு இந்தியா என்பதில்லை. இந்தியா என்ற நாட்டின் அங்கங்களே மாநிலங்கள் என்று அரசியலமைப்பை சுட்டிக்காட்டி கூறுகின்றனர். இந்த இரு கருத்துகளுக்கிடையேயான மோதலின் வெளிப்பாடாகவே, தமிழக ஆளுநர் – மாநில அரசு மோதல் பார்க்கப்படுகிறது.
முடிவில, தமிழக சட்டமன்றத்தில் நடந்த இந்த சம்பவம், அரசியலமைப்பு மரபுகள், மாநில – மத்திய அதிகார எல்லைகள், கூட்டாட்சி தத்துவம் என்பவற்றை மீண்டும் தேசிய விவாதமாக மாற்றியுள்ளது. இது வெறும் அரசியல் மோதலா? அல்லது இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கேள்வியா? என்பதை வரும் நாட்களில் நடக்கும் அரசியல் நகர்வுகளே தீர்மானிக்கும்.
nadunilai.com