வெளிவராத புத்தகத்தை ஆதாரமாக வைத்து பேசிய ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர்கள் கடும் கண்டனம்
Parliament of India
இந்திய நாடாளுமன்றத்தில் சீன எல்லை தொடர்பான விவகாரத்தை மையமாக வைத்து முன்னாள் ராணுவ வீரர் எழுதியதாக கூறப்படும் வெளிவராத புத்தகத்தை ஆதாரமாக கொண்டு பேசிய காங்கிரஸ் நிர்வாகியும், எம்.பியுமான ராகுல் காந்திக்கு, மத்திய அரசின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் பாஜக எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. விவாதத்தின் போது பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா, காங்கிரசுக்கு எதிராக ஒரு குற்றசாட்டை முன்வைத்தார். அப்போது குறுக்கிட்ட எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி, காங்கிரசுக்கு எதிராக குற்றசாட்டை முன்வைத்துள்ளார். எங்கள் தேச பக்தி குறித்தும், கலாசாரம் குறித்தும் குறித்தும் எங்கள் புரிதல் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். இப்படி அவர் கேள்வி எழுப்பியதால் அது தொடர்ப்பான விஷியத்தில் இருந்து நான் என்னுடைய உரையை துவங்குகிறேன் என்று கூறியவர், கையில் ஒரு புத்தகத்தை எடுத்து, இது முன்னாள் ராணுவத் தளபதி நரவனே நினைவுக் குறிப்பில் இருந்து எடுக்கப்பட்டது. இதை நீங்கள் நன்றாக கேட்க வேண்டும். அப்போதுதான், யார் தேச பக்தி உள்ளவர், யார் தேசபக்தி இல்லாதவர் என்பதை நீங்கள் சரியாக புரிந்து கொள்வீர்கள். இது, நான்கு டாங்கிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது நடந்த சம்பவம் பற்றியது. அவை டோக்லாமில் உள்ள ஒரு முகட்டைக் கைப்பற்றிக் கொண்டிருந்தன என்று ராகுல் பேசிக் கொண்டிருந்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சி எம்.பிக்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த புத்தகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாதது, அதன் உள்ளடக்கம் அரசு ரீதியாக சரிபார்க்கப்படாதது என்று கூறினர்.
இந்த விவகாரத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே உள்ளிட்டோர், “வெளிவராத மற்றும் சரிபார்க்கப்படாத புத்தகத்தை ஆதாரமாக கொண்டு தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை நாடாளுமன்றத்தில் பேசுவது முறையல்ல” எனக் கூறி, ராகுல் காந்தியின் பேச்சை கடுமையாக விமர்சித்தனர்.
மேலும், இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து பேசுவதற்கு அனுமதிக்காத வகையில், ஆளும் கட்சி எம்.பி.க்கள் கடும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சபையில் ஒழுங்கை நிலைநாட்ட முயன்ற சபாநாயகர் ஓம் பிர்லா, கோஷம் எழுப்பிய உறுப்பினர்களை கண்டித்ததுடன், நிலைமை கட்டுக்குள் வராத காரணத்தால் நாடாளுமன்றத்தை பலமுறை ஒத்திவைத்தார்.
இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு தரப்பினர், “தேசத்தின் பாதுகாப்பு, ராணுவத்தின் மரியாதை மற்றும் நாட்டின் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான விஷயங்களில், அதிகாரப்பூர்வ அரசு ஆவணங்கள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மட்டுமே ஆதாரமாக கொண்டு பேச வேண்டும்” என வலியுறுத்தினர். வெளிவராத புத்தகங்களை மேற்கோள் காட்டுவது தவறான தகவல்கள் பரவும் அபாயத்தை உருவாக்கும் என்றும் எச்சரித்தனர்.
சீனாவும் அமெரிக்காவும் உலகளாவிய அளவில் மோதல் போக்கில் இருந்து வரும் சூழ்நிலையில், ராகுல் காந்தி சீனா தொடர்பாக எடுத்துள்ள இந்த அணுகுமுறை அரசியல் மற்றும் தூதரக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் எதிர்க்கட்சியின் பங்கு, விமர்சன எல்லை மற்றும் அரசியல் பொறுப்பு குறித்து புதிய விவாதத்தை இந்த சம்பவம் தொடங்கி வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிகழ்வு, இந்திய நாடாளுமன்றத்தில் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் எவ்வாறு பேசப்பட வேண்டும் என்ற கேள்வியையும், அரசியல் மற்றும் நாட்டின் நலன் குறித்த சமநிலையையும் மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.
nadunilai.com