கும்பாபிஷேகம் செய்த பிறகும் பலமணிநேரம் காத்துக்கிடக்கும் பக்தர்கள் - திருச்செந்தூரில் நாம் இந்தியர் கட்சி குற்றசாட்டு
Naam Indiyar
தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாம் இந்தியர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடந்தது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் பி. பொன்ராஜ் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் டி.ஜெயகணேஷ் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சங்கரன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில தலைவர் என்.பி.ராஜா பேசியதாவது :
கடற்கரையில் வீற்றிருக்கும் திருச்செந்தூர் முருகன் திருக்கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் சில நூறு கோடிகள் செலவு செய்து புனரமைப்பு பணிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கும்பாபிசேகமும் கடந்த ஆண்டு நடந்துவிட்டது. ஆனாலும் விரதம் இருந்து வேண்டுதல்களோடு குடும்பத்தினரோடு வரும் பக்தர்கள் கடந்த ஓர் ஆண்டுகளாக கட்டணம் மற்றும் கட்டணமில்லா வரிசைகளில் வெகு நேரம் காத்திருந்து சாமிதரிசனம் செய்யும் நிலைதான் இருந்து வருகிறது. கடலில் குளித்துவிட்டு அருகே உள்ள நுழைவு வாயில் வழியே கோவிலுக்குள் அனுமதிப்பது வழக்கம். தற்போது கட்டணமில்லா பக்தர்களின் தரிசன வரிசையானது புதிதாக கட்டப்பட்ட உயர்அதிகாரிகளின் நிர்வாக அலுவலகம் அருகே துவங்கி கான்கிரேட் கூரையுடன் கூடிய வளைவுகளான சுமார் 1000 மீட்டர் பாதை கோவில் வடகிழக்கு வழியாக உள்நுழைகிறது. கோவில் உள்சுற்றுபிரகாரங்களை சுற்றி கூட்டம் அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் அவ்வழியேதான் பக்தர்கள் உள்ளே அனுமதிக்க படுகிறார்கள். ஆனால் முக்கிய நபர்கள், வேண்டியவர்கள் மட்டும் எந்த நிபந்தனையும் இல்லாமல் கோவிலுக்குள் அனுமதிக்க படுகிறார்கள். இந்த செயல்கள் அனைத்து பக்தர்களையும் மனம்நோக செய்கிறது என்று திருச்செந்தூர் முருகன் கோவில் நிலை குறித்து பேசியவர், தமிழ் தேசியத்திற்கு தாவினார்.
தமிழ்தேசியம் என்பது தனிநாடு கோரிக்கையாகும். இது தோல்வி அடைந்த ஒன்று. தமிழகத்தில் தமிழ் தேசியம் என்று நம்முன்னோர்களால் முன்வைக்கப்பட்டாலும் தமிழ் நாட்டில் திராவிட பூமியில் பேசப்படும் மொழி மக்கள் 15 சதவீதத்திற்கு மேல் வாழ்வதால் அனைவரையும் அரவனைக்கும் விதமாக திராவிடம் என்ற சொல் ஓங்கியது. தமிழ் தேசியம் மற்றும் திராவிடம் கொள்கை ரீதியாக இரண்டும் ஒன்றுதான். எதிர்கட்சிகள் அதிகாரிகளின் தவறுகளை சுட்டி காட்டினால் ஆளும் கட்சி, அதிகாரிகளை பாதுகாக்கும் நிலை அதிகரித்துள்ளது. அதனால் ஆட்சி மாற்றம் அவசியம்.
ஆன்லைன் விண்ணப்பம் மூலம் நில பட்டாக்கள் தானாக மாறும் என்ற நிலை ஏற்படுத்தினாலும் அதில் முறையான ஆவணங்கள் இருந்தாலும் VAO முதல் தாசில்தார் வரை சந்தித்தால் தான் மாற்ற இயல்கிறது மற்றும் அரசு விளம்பரம் செய்து நோயாளிகளை மருத்துவ முகாம்களுக்கு வரவைத்து பரிசோதனை செய்வதை தவிர்த்து, அரசு மருத்துவமனைகள் செயல்படும் நேரம் மற்றும் பிரிவுகளை அதிகரித்து விரைவு பரிசோதனை அதன் அறிக்கைகள் உடனே கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.
nadunilai.com