அமைச்சர் சேகர்பாபுவிற்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் கடும் எச்சரிக்கை
Bjp news
அமைச்சர் சேகர்பாபுவிற்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “கோவில்கள் அமைச்சரின் சொத்து அல்ல; பக்தர்களிடம் அதிகார போக்கு ஏற்க முடியாது” என்று ஆவேசம் காட்டினார்.
கன்னியாகுமரியில் நடைபெறும் கோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, முன்னாள் தமிழக பாஜக தலைவரும் முன்னாள் தெலங்கானா ஆளுநருமான தமிழிசை செளந்திரராஜன், சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கன்னியாகுமரியில் நடைபெற்ற கோவில் நிகழ்ச்சியின் போது இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பக்தர்களை கடுமையான வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.“கோவில்கள் எல்லாம் அமைச்சர் சேகர்பாபுவிற்கு சொந்தம் கிடையாது. கோவில்களை அவருக்கு யாரும் எழுதி கொடுக்கவில்லை. கோவில்கள் பக்தர்களுக்கானது; அரசியல்வாதிகளின் அதிகாரக் காட்சிக்காக அல்ல,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில்,“கோவில்களில் போய் வாட்ச்மேன் மாதிரி நின்று கொண்டு, போகிற வருகிற பக்தர்களிடம் அதிகாரம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.அதிகாரம் செய்வதற்கு அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? உங்களை நம்பி யாரும் கோவிலுக்கு வரவில்லை; பக்தி தான் மக்களை கோவிலுக்கு அழைத்து வருகிறது,”என்று அமைச்சர் சேகர்பாபுவை கடுமையாக விமர்சித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலை குறிப்பிட்ட தமிழிசை செளந்திரராஜன்,“வரும் 2026 சட்டமன்ற தேர்தல் வரட்டும். அப்பொழுது நாங்கள் பார்த்துக் கொள்வோம்,”என்று எச்சரிக்கை விடுத்தார். பக்தர்களிடம் கடுமையாக நடந்துகொண்டதாக கூறி,“பக்தர்களிடம் இந்த மாதிரியான போக்கை கடுமையாக எச்சரிக்கிறேன்,”என்று அவர் தெரிவித்தார்.
கன்னியாகுமரி கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு, பக்தர்களை பார்த்து சோறுதான் திங்கிறீயா என்று கேட்டாராம். அது குறித்த கேள்விக்குதான் தமிழிசை இப்படி பதில் அளித்தார். இந்த சந்திப்பின்போது தூத்துக்குடி மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
nadunilai.com