மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும், பாகுபாடான அரசின் உதவித் தொகை திட்டங்கள் !

Education News

மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும், பாகுபாடான அரசின் உதவித் தொகை திட்டங்கள் !

மலை மீது விழும் மழை நீர் தெளிந்த நீரோடையாக ஓடிவரும் போது இடையில் கலக்கும் கலங்கிய கலவையால் மாசுபடுவதுபோல், தெளிந்த நீரோடைபோலான மாணவச் செல்வங்களிடம் தேவையில்லாத விசயங்கள் கலந்து அவர்களின் மனங்களை மாசுபடுத்துகிறது. பழைய காலங்களில் வளர்ந்து வரும் குழந்தைகளிடம் நல்ல விசயங்களை புகுத்தினார்கள். ஆனால் நல்ல விசயங்களை தாண்டி கெட்ட விசயங்கள் அதிகம் புகுந்து கொள்ளும் காலமாக தற்போதைய காலம் இருந்து வருகிறது. அதனால்தான் மாணவ சமூகம் கூட கத்தியை தூக்கி நடுரோட்டில் சண்டை போட்டுக் கொள்ளும் அளவிற்கு அந்த புகுத்தல் நடந்துவிடுகிறது. இது நல்லது, இது கெட்டது என்று சொல்வதை கூட தவறு என்று வாதிடும் புரட்சியாளர்களும் இந்த விவகாரத்தில் குற்றவாளிகள்தான். நல்லதை கூறும் நல்லொழுக்க வகுப்புகளை பெரும்பாலான மாணவர்கள் பார்ப்பதில்லை. அனைவரும் அண்ணணா, தம்பியா, சகோதரனா, சகோதரியாக, தோழனா, தோழியா பார்க்க உதவும் நல்லொழுக்க வகுப்பு காணாமல் போனது இன்னொரு காரணம். நாளின் 24 மணி நேரத்தில் முக்கால் பங்கு நேரத்தை பங்குபோடும் சினிமா, மீடியாக்கள் நல்ல விசயங்களை மட்டும் சொல்வதில்லை. நடப்பதைத்தானே சொல்கிறோம் என்று சொல்லிவிட்டு இளைய தலைமுறைக்கு தவறான வழியை காட்டுகிறார்கள். சமீபகாலத்தில் மாணவர்கள் சமூகத்தில் நடைபெற்று வரும் பிரச்னைகளை தீர்ப்பதற்காக, அதாவது மாணவர்களிடையே சாதி உணர்வு அடையாளப்படுவது மற்றும் மேம்படுவதை தடுக்க தமிழக கல்வித்துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இது, வரவேற்க வேண்டிய விசயம்தான். ஆனால் அதிலும் சில மாற்றங்கள் அவசியம். அதை சொல்லவே இதை எடுத்திருக்கிறோம். 

அதாவது தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து ஆசிரியர்களும், ஊழியர்களும் சமூக பிரச்னைகள், சாதி பாகுபாடு தொடர்பாக தலைமை ஆசிரியர் நடத்தும் கூட்டத்தில் கலந்துப் ஆலோசித்து, பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி வழங்குவதற்கு திட்டமிட வேண்டும். ஒவ்வொரு வகுப்பறையிலும், மாணவர்களுக்கான இருக்கை ஒதுக்கீடு உயரத்திற்கேபவும், அவ்வப்போது மாற்றி அமைத்து அமர செய்தல் வேண்டும். உடல் ஊனமுற்ற மாணவர் மற்றும் கண்பார்வை குறைபாடு உள்ளவர்களை தவிர்த்து, பிறமாணவர்களை 15 நாட்களுக்கு ஒருமுறை வரிசையிலும் மாற்றி அமர செய்தல் வேண்டும்.

மாணவர்களின்   வருகை பதிவேட்டில், அவர்களின் சாதி தொடர்பான எந்த நெடுவரிசையோ,விபரங்களோ இருக்க கூடாது. எந்த நேரத்திலும் வகுப்பு ஆசிரியர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சாதியை குறிப்பிட்டு மாணவர்களை அழைக்கவோ, சாதிக்கு காரணமான தன்மை பற்றி எந்த இழிவான கருத்துக்களையும் தெரிவிக்க கூடாது. எந்த ஒரு மாணவரின் உதவித் தொகை தொடர்பாக பெறப்பட்ட தகவல் தொடர்புகளின் விபரங்களை வகுப்பறையில் அறிவிக்க கூடாது. தகவல் தொடர்புகள் தேவைப்பட்டால், தலைமை ஆசிரியர் மாணவர்களை தனியே அழைக்காமல் குழுவாக அழைத்து, தகவலை வாய்மொழியாகவோ அல்லது எழுத்து பூர்வமாகவோ வழங்க வேண்டும். இந்த தகவலை பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்ப வேண்டும்.

பள்ளியில் மாணவரின் தனிப்பட்ட விபரங்கள் ஒரு பதிவு கோப்பாக பராமரிக்கும் நிலையில், தலைமையாசிரியர் அனுமதியுடன் மட்டுமே அந்த கோப்பினை பயன்படுத்திட வகுப்பாசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தலைமையாசிரியரால் அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும். மாணவர்கள் வண்ணமணிக்கட்டு   பட்டைகள் அல்லது வேறுபாடுகளை வெளிப்படையாக தெரியக்கூடிய அடையாளங்கள் அணிவதை தடை செய்வதோடு, அவற்றை அணிவதை தடுப்பதற்கான ஆலோசனைகளை, பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு அவ்வப்போது வழங்க வேண்டும். 

மாணவர்கள், தங்கள் சாதியை குறிப்பிடும் அல்லது சாதி தொடர்பான உணர்வுகளை வெளிப்படுத்தும், மிதி வண்டிகளில் பள்ளிக்கு வருவதையும் தவிர்க்க வேண்டும். இவற்றை பின்பற்ற தவறினால், பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்துவதோடு கூடுதலாக, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நன்னெறி வகுப்புகள் கட்டாயம் கற்பிக்க வேண்டும். சுழற்சி முறையில் இந்த நன்னெறி விரிவுரையை வழங்க ஒரு தகுதி வாய்ந்த ஆசிரியரை நியமிக்க வேண்டும். கூடுதலாக, இந்த விரிவுரைகளில் பங்களிக்க நன்கு தகுதி வாய்ந்த வெளிநபர்களை அழைக்கலாம். எந்த ஒரு மாணவரும் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டால், அந்த மாணவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க, தலைமையாசிரியர், பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கு பரிந்துரைத்து மற்றும் சார்ந்த வகுப்பாசிரியர் மாணவரின் முன்னேற்றத்தை கண்காணிக்க வேண்டும். 

மாணவர்களுக்கு பள்ளி அளவில் ஆசிரியர் வழிகாட்டி ஆசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டும். மாணவிகளுக்கு கட்டாயமாக பெண் ஆசிரியரை நியமிக்கலாம். ஆண் மாணவர்களுக்கு ஆண் அல்லது பெண் ஆசிரியரை நியமிக்கலாம். இந்த ஆசிரியர் பள்ளியில், பள்ளி நல அலுவலராக செயல்படுவார். 500 க்கும் அதிகமான மாணவர்கள் இருந்தால் கூடுதலாக ஆசிரியர் வழிகாட்டியை தலைமை ஆசிரியர் நியமித்துக் கொள்ளலாம். மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு நியமிக்க வேண்டும். இந்த குழுவில் தலைமையாசிரியர், 2 ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் பெற்றோர் உறுப்பினர் 2, பள்ளி மேலாண்மை குழு பிரதிநிதி ஒருவர், ஆசிரியர் அல்லாத பணியாளர் ஒருவர், வெளிநபர் ஒருவர் இருக்க வேண்டும். 

பள்ளிகளில் சைல்டு ஹெல்ப் லைன் 1098, பள்ளிக்கல்வித்துறை உதவி எண் 14417 ஆகிய உதவி எண்கள் குழந்தைகள் எளிதில் படிக்கும் வண்ணம் பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும். அனைத்து திங்கட்கிழமைகளிலும் காலையில், பள்ளியில் நடக்கும் காலை வணக்க கூட்டங்களில் தலைமையாசிரியரும், பிற ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும். அதில் சில நிமிடங்கள், குழந்தைகள் பாதுகாப்பு ’மாணவர் மனசு’ புகார் பெட்டி மற்றும் குழந்தை பாலியல் வன் கொடுமை மற்றும் கருத்து வேறுபாடு, சச்சரவுகள் பற்றிய புகார் அளிக்கும் முறை, குழந்தைகள் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைகளை குழந்தைகள் நன்கு அறியும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டும். 

அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் செல்லும் அறைகள், விளையாட்டு மைதானம், வகுப்பறை முகப்பு, உள்ளே வருவது மற்றும் வெளியே செல்வதற்கான வழிகள் மற்றும் பள்ளி வளாகங்களுக்குள் உபயோகிக்கபடாமல் இருக்கும் இடங்களிலும் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். விளையாட்டு பாடவேளைகளில் கட்டாயம் மாணவர்கள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவதை, தலைமையாசிரியர் உறுதி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு விபரங்கள் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இவ்வளவு முன்னேற்பாடுகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முயற்சி செய்யும் அரசு, ஒரே வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு மத்தியில் கல்வி உதவித் தொகை அனைவருக்கும் பொதுவானதாக இல்லை. பிசி, எம்.பி.சி, எஸ்.சி, மத சிறுபான்மை என  மாணவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அந்த இடத்தில் மாணவர்கள் இரண்டு, மூன்றாக பிரிந்து போகிறார்கள் என்பதை அரசு உணர வேண்டும். பொதுவாக உதவித்தொகை என்பது  ஏழை மாணவர்களுக்கு வழங்குவது மட்டுமே சரியானதாகும். முடியும் என்றால் அனைவருக்கும் வழங்கலாம். அப்போதுதான் எந்த பாகுபாடும் தெரியாது. அனைவரையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான்  சீறுடை திட்டத்தை கொண்டுவந்தார் பெருந்தலைவர் காமராஜர். மாணவர்களில் ஏழை மாணவர்களுக்கு உதவவேண்டும் என்பது அவசியமான ஒன்று. அதில் என்ன பிசி, எம்.பி.சி, பட்டியலின மாணவர்கள், சிறுபான்மை மாணவர்கள் என்று பிரித்து காண்பித்து உதவித் தொகை வழங்குவது?. மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்றால் அனைத்து மாணவர்களுக்கும் உதவ வேண்டும். அதுபோன்ற உதவிகள் அவசியமுள்ள மாணவர்கள் அனைத்து சமூகத்திலும் இருக்கலாம். அதுபோன்ற உதவிகள் அவசியம் இல்லாதவர்களுக்கு அவர்களின் விருப்படி விட்டுவிட்டு விரும்பியவர்களுக்கு உதவலாம். இது சமூக பார்வை கொண்டதாக இருக்க கூடாது. இந்த விவகாரத்தில் அரசின் கருத்து வேடிக்கையானதாக இருக்கிறது. உதவி பெரும் மாணவர்களை தனியாக அழைத்து யாருக்கும் தெரியாமல் கொடுக்க வேண்டும் என்பதுபோல் கண்ணாம்பூச்சு விளையாட்டு விளையாட சொல்கிறது கல்வித்துறை. 

தற்போது இத்தனை விதிமுறைகளை வகுத்து வழங்கியிருக்கும் கல்வித்துறை, பழையபடி ஆத்திசூடி போன்ற நல்லொழுக்க பாடங்களை சிறு வயதிலேயே புகுத்த வேண்டும். அதுபோல் நல்ல கருத்துக்கள் எந்த புத்தகத்தில் இருந்தாலும் அதனை எடுத்து பாடம் நடத்த வேண்டும். நல்ல ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் கூறும் இதிகாசங்களை தேர்ந்தெடுத்து குழந்தைகளிடம் தெரிவிக்க வேண்டும். அதெல்லாம் செய்யாமல் புரட்சி பேசுவோரின் பேச்சை கேட்டால் இப்படித்தான் மாணவ வயதிலேயே தவறான வழியை தேடும் நிலை ஏற்படும். எனவே கல்வித்துறை தன்னுடைய பரந்த மனற்பான்மையை செயல்படுத்தி மாணவ சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டும் அவ்வளவுதான்.