தூத்துக்குடி மாநகரில் வெள்ள நீர் தேங்குவதை தடுக்க சுற்றிலும் வெள்ள நீர் பைபாஸ் கால்வாய் அமைக்க வேண்டும் - பா.ஜ.க கோரிக்கை

bjp

தூத்துக்குடி மாநகரில் வெள்ள நீர் தேங்குவதை தடுக்க சுற்றிலும் வெள்ள நீர் பைபாஸ் கால்வாய்  அமைக்க வேண்டும் - பா.ஜ.க கோரிக்கை

ஒவ்வொரு ஆண்டு மழைகாலங்களிலும் வெள்ள நீரோடு போராடுவதில் இருந்து தூத்துக்குடி மக்கள் தப்பிக்க வேண்டியது உள்ளது. நிரந்தர தீர்வு வேண்டும் என்று மாநகர மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு மழை வெள்ளத்தை பார்வையிட தூத்துக்குடிக்கு வந்திருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட நிரந்தர தீர்வு வேண்டும், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறி சென்றார். தற்போதுள்ள மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியும் அதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார். நிரந்தர தீர்விற்கான ஐடியா தேடப்பட்டு வருக்கிறது. 

இந்தநிலையில் மாநகரை சுற்றி 30 மீட்டர் அகலத்தில் பைபாஸ் மழைநீர் கால்வாய் அமைத்தால் வெள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என்கிற யோசனையுடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பி.வெள்ளத்தாய் இன்று(05.02.2024), பாஜகவினருடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். 

அந்த மனுவில்,   ’’தூத்துக்குடி மாநகரத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டும், பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியும்,மக்களின் உடைமைகள் சேதமாகியும், பொதுமக்களும் கால்நடைகளும் தொடர்ந்து உயிரிழைப்பைச் சந்தித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. 

நான் பல ஆண்டுகளாக தூத்துக்குடி மாநகரில் வசித்து வருகிறேன். தூத்துக்குடி மாநகரம் வங்காள விரிகுடா கடலை ஒட்டி அமைந்திருப்பதால் சுற்று வட்டாரங்களில் பல கிலோ மீட்டருக்கு அப்பால் பெய்யும் மழை மற்றும் வெள்ள நீர் தூத்துக்குடி நகருக்குள் வந்து விடுகிறது. இதுதான் மிக முக்கியக் காரணமாகும். 

ஆகவே, மாற்றுத் தீர்வாக எவ்வாறு போக்குவரத்தில் புறவழிச்சாலை அமைத்து தேவையற்ற வாகனங்கள் ஊருக்குள் வராமல் புறவசிச்சாலையில் செல்வதைப்போல் தூத்துக்குடி மாநகரைச் சுற்றி வெளிவட்ட வெள்ளத் தடுப்பு வாய்கால் சுமார் 30 மீட்டர் அகலத்தில் கடல் மட்டத்திற்கு சற்று உயர்வாக தூத்துக்குடி ஊரைச் சுற்றி அமைத்தும் அதன் வழியாக மேற்குப் பகுதியிலிருந்து வரும் மழை வெள்ள நீரும், வடக்குப் பகுதியிலிருந்து வரும் வெள்ள நீரும் தூத்துக்குடி மாநகருக்குள் வராமல் செல்ல ஏதுவாகும்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்திற்கு முன்பாகவே தூத்துக்குடி மாநகருக்குள் இருக்கும் சாக்கடை மற்றும் மழை வெள்ள கால்வாய்களை அரசு அதிகாரிகள், பொதுமக்களின் ஒத்துழைப்போடு ஒரு மக்கள் இயக்கமாக முழுவதுமாக சுத்தப்படுத்தியும் குறிப்பாக (பிளாஸ்டி கழிவுகள்) சாக்கடைக் கால்வாயில் சேராதவாறு நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்’’ என்று மனுவில் கூறியுள்ளார்.