வெள்ளத்தால் பாதிப்படைந்த ஸ்ரீவை அரசு மருத்துவமனையை புதுப்பிக்க வேண்டும் - முதல்வரிடம் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ மீண்டும் கோரிக்கை

Uoorvasi Amirtharaj

வெள்ளத்தால் பாதிப்படைந்த ஸ்ரீவை அரசு மருத்துவமனையை புதுப்பிக்க வேண்டும் - முதல்வரிடம் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ மீண்டும் கோரிக்கை

வெள்ளத்தால் சேதமடைந்த ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை இன்று வரை புதுப்பிக்கப்படாததால் உடனடியாக புதுப்பித்து சேதமடைந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் உயிர்காக்கும் கருவிகளை வழங்க வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் தமிழக முதல்வரிடம் மீண்டும்  கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது : எனது ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற  தொகுதியில்,  ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் உள்ள  தாலுகா தலைமை அரசு மருத்துவமனையை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த  50 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  கடந்த டிசம்பர் மாதம் 17 மற்றும் 18ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதி கன மழை மற்றும்  தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட பெரு  வெள்ளம் ஆகியவற்றின்  காரணமாக   வெள்ள நீர் மருத்துவமனைக்குள் புகுந்ததால்  மருத்துவமனை உபகரணங்கள் மற்றும் உயிர்காக்கும் கருவிகள் உள்ளிட்ட மருத்துவமனை உடைமைகள் அனைத்தும் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவமனை முழுமையாக இயங்க முடியாமல் உள்ளது. 

இதுகுறித்து நான் கடந்த மாதம் 10ம் தேதி முதலமைச்சர், அமைச்சர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்தும் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன்  சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் விபத்து, அவசரசிகிச்சை மற்றும் பிரேத பரிசோதனை என மக்கள் பயன்படுத்தும் அருகில் உள்ள ஒரே அரசு மருத்துவமனை என்பதால் தற்போது பொதுமக்களுக்கு மருத்துவ சேவை கிடைப்பது இயலாததாக உள்ளது.  இந்த மருத்துவ சேவைகளுக்காக பொதுமக்கள் அங்கிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு செல்ல நேரிடுகிறது. 

இதனால் மக்களுக்கு பல இன்னல்கள் மற்றும் உயிர் சேதமும் ஏற்படுகிறது.  எனவே அரசு இதில் தனி கவனம் செலுத்தி அதிக கன மழை மற்றும் பெரு வெள்ளத்தால் சேதம் அடைந்த உபகரணங்கள் மற்றும் உயிர்காக்கும் கருவிகள் அனைத்தையும் வழங்கி மருத்துவமனையை நவீன வசதிகளும் கூடிய மருத்துவமனையாக புதுப்பித்து தர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.