வாட்டர் ஹீட்டரை அணைத்துவிட்டு குளிக்க வேண்டும் - மின்வாரியம் வேண்டுகோள்

TNEB

வாட்டர் ஹீட்டரை அணைத்துவிட்டு குளிக்க வேண்டும் - மின்வாரியம் வேண்டுகோள்

மின் விபத்துகளைத் தவிர்க்க வாட்டர் ஹீட்டரை அணைத்துவிட்டு குளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மின்சாரவாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை : பனிக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் வாட்டர் ஹீட்டர் (கீசர்) காரணமாக ஏற்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க, தண்ணீர் சூடேறியவுடன் வாட்டர் ஹீட்டரை அணைத்துவிட்டு குளிக்க வேண்டும் என மின்வாரியம் பொதுமக்களிடம் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தற்போது குளிர் அதிகரித்து வரும் சூழலில், தண்ணீர் சூடாக்க வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வாட்டர் ஹீட்டரை இயக்கத்தில் வைத்துக்கொண்டே குளிப்பது மிகவும் ஆபத்தானது. தண்ணீர் தேவையான அளவு சூடேறியதும், உடனடியாக வாட்டர் ஹீட்டரை அணைத்துவிட்டு குளிப்பதே பாதுகாப்பான நடைமுறை” என தெரிவித்துள்ளது.
மேலும், வாட்டர் ஹீட்டரை அணைக்காமல் குளிக்கும்போது, மின் கசிவு ஏற்பட்டு உயிரிழப்புக்கும், கடுமையான காயங்களுக்கும் வழிவகுக்கும் அபாயம் இருப்பதாகவும் மின்வாரியம் எச்சரித்துள்ளது. குறிப்பாக பழைய வயரிங், தரமற்ற ஹீட்டர்கள் மற்றும் ஈரப்பதம் உள்ள குளியலறைகள் மின் விபத்துகளுக்கு காரணமாகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

RCCD அமைப்பது அவசியம்

அனைத்து வீடுகளிலும் உயிர் பாதுகாப்பு சாதனமான RCCD (Residual Current Circuit Device) கட்டாயமாக அமைத்துக் கொள்ள வேண்டும் என மின்வாரியம் வலியுறுத்தியுள்ளது. இந்த சாதனம், மின் கசிவு ஏற்பட்ட உடனே மின்சாரத்தை தானாகவே துண்டித்து, மனித உயிர்களை பாதுகாக்கும் முக்கிய பாதுகாப்பு கருவியாக செயல்படுகிறது.

மின்வாரியத்தின் முக்கிய அறிவுறுத்தல்கள்:

வாட்டர் ஹீட்டரை இயக்கத்தில் வைத்துக்கொண்டு குளிக்க வேண்டாம். தண்ணீர் சூடேறியவுடன் ஹீட்டரை அணைத்த பிறகே குளிக்க வேண்டும். தரமான வயரிங் மற்றும் அங்கீகாரம் பெற்ற ஹீட்டர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குளியலறையில் ஈரப்பதம் அதிகரிக்காத வகையில் கவனம் செலுத்த வேண்டும். RCCD போன்ற பாதுகாப்பு சாதனங்களை கட்டாயம் நிறுவ வேண்டும். மின் விபத்துகளைத் தவிர்த்து, குடும்பத்தினரின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய, மின்வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.