பாமக உள்கட்சி பிரச்னை முடிவும் வரை தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கை – உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
PMK
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) உட்கட்சித் தகராறு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தேர்தலை தள்ளி வைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்து தள்ளுபடி செய்தது. “நீதிமன்ற நேரத்தை வீணாக்காதீர்கள்” என அமர்வு எச்சரிக்கை விடுத்தது.
பாமக நிறுவனர் எஸ். ராமதாஸ், பாமக சின்னமான மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும், தன்னை கட்சித் தலைவராக அங்கீகரிக்க வேண்டும், அதுவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். பாமகில் நிறுவனர் ராமதாஸுக்கும் தற்போதைய தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் இடையே கட்சித் தலைமையுரிமை தொடர்பாக நீண்டநாள் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி, தேர்தல் ஆணையம் அன்புமணியின் முகவரிக்கு கடிதம் அனுப்பி, மாம்பழம் சின்னம் அவர்களின் தலைமையிலான அணிக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. இதையே ரத்து செய்ய வேண்டும் என்று ராமதாஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரியது. இந்த மனுக்கள், தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ராமதாஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே. அருள் ஆஜராகி, அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, கட்சி அபகரிக்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.
தேர்தல் ஆணையம் சார்பில் நிரஞ்சன் ராஜகோபால் ஆஜராகி, உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. சின்னம் முடக்கம் செய்வது தொடர்பாக தீர்மானிக்க அதிகாரம் இல்லை. இதே விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே சிவில் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறியுள்ளது என்று விளக்கம் அளித்தார்.
அன்புமணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி, முன்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சமரசம் முயன்றார், ஆனால் பலன் இல்லை. மனுவில் உள்ள கையொப்பம் தொடர்பாக சந்தேகம் உள்ளது என்றும் கூறினார். இதற்கு பதிலளித்த ராமதாஸ் தரப்பு, “அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார்; மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார்” என தெரிவித்தது.
விசாரணையின் போது, தலைமை நீதிபதி “தந்தை சொல்லை மகன் கேட்பதில்லையா?” எனக் கேள்வி எழுப்பியதும் நீதிமன்றத்தில் கவனம் ஈர்த்தது. உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், உரிய நிவாரணத்தை சிவில் நீதிமன்றத்தில் தேடிக் கொள்ளலாம். உயர்நீதிமன்றத்தில் ஒரே விவகாரம் குறித்து பல மனுக்கள் தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்கக் கூடாது. அபராதம் விதிக்க வேண்டிய நிலை உருவாகலாம் எனக் கூறி இரு மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.
உட்கட்சி பிரச்சினை தீரும் வரை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் “வினோதமான கோரிக்கை” எனப் பார்க்கப்படுகிறது. பொதுத் தேர்தல் என்பது அரசியல் கட்சிகளின் உள் பிரச்சினைகளால் நிறுத்தப்பட முடியாத ஜனநாயக செயல்முறை என்ற கருத்தும் வலுப்பெற்றுள்ளது.
இந்த தீர்ப்பின் பின்னர், பாமக உள்கட்டமைப்பில் பதற்றம் அதிகரித்துள்ளது. அடுத்த கட்டமாக சிவில் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் தீர்ப்பே கட்சியின் எதிர்கால திசையை நிர்ணயிக்கும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
nadunilai.com