சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த முதல்வர் அறிக்கை: அரசியல் வட்டாரங்களில் விவாதம் தீவிரம்

M.k.stalin

சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த முதல்வர் அறிக்கை: அரசியல் வட்டாரங்களில் விவாதம் தீவிரம்

சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த முதல்வர் அறிக்கை: அரசியல் வட்டாரங்களில் விவாதம் தீவிரம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், “சிறுபான்மையினர் அச்சமின்றி வாழ துணை நிற்பதில்தான் பெரும்பான்மையினரின் பழமும் குணமும் இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ள முதல்வர், பெரும்பான்மை என்ற பெயரில் செயல்படும் சில வலதுசாரி வன்முறை கும்பல்கள் தாக்குதல் மற்றும் கலவரங்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் வேளையிலேயே இதுபோன்ற வன்முறைகள் நடைபெறுவது, நாட்டு மக்களுக்கு தவறான செய்தியை கொண்டு சேர்க்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, ஜெபல்பூர், ராய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடைபெறுவது நல்லிணக்கத்தை விரும்பும் எந்த நாட்டு மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய பாஜக அரசு பொறுப்பேற்ற பின்பு சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் 74 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படும் புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டிய முதல்வர், இது எதிர்காலத்தில் நாடு எதிர்நோக்கும் ஆபத்துக்களை உணர்த்துவதாக எச்சரித்துள்ளார். ஆகவே, மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் கலவரக்காரர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது அனைவரது பொறுப்பும் கடமையும் ஆகும் என அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

அண்ணாமலை கண்டனம்

இந்த நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த சம்பவங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறி, தாக்குதல்களை அவர் கண்டித்துள்ளார். வன்முறைக்கு எந்த மதமும் அரசியலும் அடையாளமாக இருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

சமூக வலைதளங்களில் எதிர்வினை

இதற்கிடையே, சமூக வலைதளங்களில் பாஜக மற்றும் சில இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஆதரவாளர்கள் முதல்வரின் அறிக்கையை விமர்சித்து வருகின்றனர். வங்கதேசத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறைகளில் இந்துக்கள் கொல்லப்படுவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும், ஆனால் இந்தியாவில் சிறுபான்மையினர் தொடர்பான சம்பவங்களுக்கு மட்டும் உடனடியாக கருத்து தெரிவிப்பது ஏன் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பி வருகின்றனர்.

“முதல்வர் அனைவருக்குமான முதல்வர் தானே? கொண்டாட்டமும் வன்முறையும் எல்லோருக்கும் பொதுவானதே. கிறிஸ்தவ, இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்வர், இந்து பண்டிகைகளில் அதே அளவில் ஈடுபடுவதில்லை. இந்துக்கள் பாதிக்கப்படும் சம்பவங்களில் கருத்து தெரிவிக்காதவர், கிறிஸ்தவ அல்லது இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால், அது எந்த நாட்டில் நடந்தாலும் குரல் கொடுப்பது நியாயமா?” என்ற கேள்விகளையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.

அரசியல் வட்டார பார்வை

அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில், முதல்வரின் அறிக்கை மத நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பை மையமாகக் கொண்டதாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் எழும் விமர்சனங்கள் இது அரசியல் விவாதமாக மாறியுள்ளதை காட்டுகின்றன. ஒருபுறம் வன்முறைக்கு எதிரான கண்டனம் அவசியம் என்ற கருத்தும், மறுபுறம் எல்லா தரப்பினருக்கும் சமமாக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசியல் தலைவர்களுக்கு உண்டு என்ற வாதமும் முன்வைக்கப்படுகின்றன.

மொத்தத்தில், சிறுபான்மையினர் பாதுகாப்பு, பெரும்பான்மையினரின் பொறுப்பு, வன்முறைக்கு எதிரான நடவடிக்கை மற்றும் அரசியல் சமநிலை ஆகியவை தொடர்பான விவாதங்கள் தற்போது தேசிய அளவில் மீண்டும் தீவிரமாகியுள்ளன.