ஓ.பி.எஸ் ஒதுங்கி நிற்க வேண்டிய தருணமா? – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

OPS News

ஓ.பி.எஸ் ஒதுங்கி நிற்க வேண்டிய தருணமா? – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) சமீபத்திய அரசியல் நகர்வுகள் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக விளங்கிய ஓபிஎஸ், அவரால் பலமுறை முதலமைச்சராக பதவி ஏற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சியில் ஏற்பட்ட தலைமை மாற்றங்கள் கட்சியை இரு அணிகளாகப் பிரித்தன. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும், ஓபிஎஸ் அணியும் நீண்டகாலமாக அதிகாரப் போட்டியில் ஈடுபட்டன. இந்த உள்கட்சிப் பிரச்சினை நீதிமன்றங்களையும் சென்றடைந்து, பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்ட விஷயமாக மாறியது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், மீண்டும் அதிமுகவில் இணைந்து செயல்பட வேண்டும் என்ற முயற்சியில் ஓபிஎஸ் தொடர்ந்து இருந்தார். “அதிமுகவை மீட்போம்” என்ற கோஷத்துடன் ஒரு குழுவோடு செயல்பட்டாலும், காலப்போக்கில் அவரது அணியில் இருந்த பலர் விலகிச் சென்றதால் அவரது அரசியல் செல்வாக்கு குறைந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேற்று சந்தித்து அரசு செயல்பாட்டுக்கு வாழ்த்து தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இது அதிமுக வட்டாரத்தில் கடும் எதிர்ப்பை உருவாக்கியதோடு, ஓபிஎஸ் அடுத்த கட்டமாக வேறு அரசியல் தளத்தைத் தேடுகிறாரா என்ற சந்தேகத்தையும் தூண்டியுள்ளது.

ஒரு முக்கிய பதவியில் இருந்தவர், குறிப்பாக ஒரு பெரிய கட்சியின் தலைமைப் பொறுப்பை வகித்தவர், தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட சூழலில் தன்னுடைய மதிப்பை காக்க அமைதியாக இருந்து அரசியல் பொறுமையை காட்டுவது அவசியம். தன்னை அழைக்கும் நிலையை உருவாக்குவது தான் நீண்டகால அரசியல் மரியாதைக்கான வழி என்றும் அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

75 வயதை எட்டிய நிலையில் தொடர்ந்து பதவிக்கான முயற்சியில் தீவிரமாக இருப்பது, அவரின் முந்தைய அரசியல் கண்ணியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஏற்கனவே சிலர் “அவரின் அரசியல் காலம் முடிந்துவிட்டது” என விமர்சித்து வரும் நிலையில், தொடர்ந்து அணிமாறும் தோற்றம் உருவானால் அது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. மற்றொரு பக்கம், ஓபிஎஸ் எந்த அணியிலும் இணைகாமல் தனித்த அரசியல் அடையாளத்துடன் செயல்பட்டால் அவரை மீண்டும் முக்கிய சக்தியாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கலாம் என்றும் சிலர் நம்புகின்றனர்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் எதிர்காலத்தில் எந்த அரசியல் பாதையைத் தேர்வு செய்வார் என்பது தமிழக அரசியலில் கவனிக்கத்தக்க விடயமாக மாறியுள்ளது. அவர் ஓய்வெடுத்து மறுசீரமைப்பு முயற்சியில் ஈடுபடுவாரா? அல்லது புதிய அரசியல் தளத்தைத் தேர்வு செய்வாரா? என்பது காலம் தீர்மானிக்கும் கேள்வியாக உள்ளது. அவர் எதை செய்தாலும் நிதானமாக தியானம் செய்து அதன் பிறகு முடிவெடுப்பதே நல்லது.