வறட்சி மாவட்டமாக்குங்கள் – நிவாரணம் வழங்குங்கள்: தூத்துக்குடி கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

Agri News

வறட்சி மாவட்டமாக்குங்கள் – நிவாரணம் வழங்குங்கள்: தூத்துக்குடி கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

தூத்துக்குடி: மாசி-7(19.02.2026)

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட மானாவாரி பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, விவசாயிகள் தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அங்கு இல்லாததால், அவர் நேரில் வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு கூட்டத்தை அமைதியாக நிறுத்தி வைத்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் விரைந்து வந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டார்.

அப்போது தென்னக மானாவாரி விவசாயிகள் சங்க தலைவர் பிரேம்குமார், “விளாத்திகுளம், எட்டையபுரம், கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு பகுதி மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் மானாவாரி பகுதிகள். இந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. மழை அளவு குறைவாகவும், சரியான நேரத்தில் இல்லாமலும் இருந்ததால் மிளகாய், உள்ளி, மல்லி போன்ற தோட்டக்கலை பயிர்களும், மக்காச்சோளம், உளுந்து, மாசி, கம்பு, சோளம் போன்ற வேளாண் பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த டிசம்பரில் அதிக மழை பெய்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அது உண்மை நிலவரம் அல்ல. மழை அளவு அதிகமாகக் காட்டப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் தர வேண்டும்.”என்றவர், “தூத்துக்குடி மாவட்டத்தை உடனடியாக வறட்சி மாவட்டமாக அறிவித்து, ஏக்கருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

விவசாயிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், “மழை அளவை தற்போது நவீன மழை அளவீட்டு கருவிகள் மூலம் கணக்கிடப்படுகிறது. அது தவறான தகவலை வழங்காது. நீங்கள் நேரில் வந்து பாருங்கள், கணக்கீட்டை காட்டுகிறேன்,” என்றார். மேலும், “பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு நான் நேரில் வர தயாராக உள்ளேன். சனிக்கிழமை வருகிறேன். அல்லது நீங்கள் சொல்லும் நாளில் நான் வந்து பார்க்கிறேன்.” என்று உறுதி அளித்தார்.

மேலும், பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகள் மற்றும் மான்களை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த ஆட்சியர், “பன்றிகளை பிடிக்க பிரத்யேக கூண்டு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில பன்றிகள் ஏற்கனவே பிடிக்கப்பட்டுள்ளன,”என்று தெரிவித்த ஆட்சியர், அதற்கு ஆதாரமாக பன்றிகள் கூண்டுக்குள் பிடிபட்டிருக்கும் வீடியோவை திரையில் போட்டு காட்டினார். மேலும் படிப்படியாக அதற்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். 

கூட்டத்தில் நடந்த நிகழ்வுகளை விவசாயி ஒருவர் செல்போனில் பதிவு செய்ததாகவும், அனுமதி இல்லாமல் எடுத்ததாக மக்கள் தொடர்பு துறையினர் அதை அழித்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.  இதனை கண்டித்து விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் இருபுறமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர். 

விவசாயிகளை பொருத்தவரை, தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், ஏக்கருக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், பன்றி, மான் போன்ற விலங்குகளிடமிருந்து பயிர் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும், மழை அளவு கணக்கீடு குறித்து தெளிவான விளக்கம் தர வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கைகளாகும்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் எவ்வாறு நடவடிக்கை எடுக்கிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முன்பான இந்த சூழலில், விவசாயிகளின் பிரச்சினைகள் அரசியல் முக்கியத்துவம் பெறும் வாய்ப்பும் இருப்பதாகக் கூறப்படுகிறது.