தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை விவகாரம் – சரத்குமார் சுளீர்

Bjp news

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை விவகாரம் – சரத்குமார் சுளீர்

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஆர். சரத்குமார், தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.

அவருக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சரத்குமார், தூத்துக்குடியில் மத்திய அரசு பங்களிப்புடன் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையை, தமிழக அரசு தற்போது குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றி தொடங்கும் முயற்சியில் உள்ளது என்பதே மருத்துவமனை குறித்த கேள்வி எழுந்த காரணம் என விளக்கினார்.

மேலும், அவர் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியதில், “அவர்கள் அப்படித்தான் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். நாம் உண்மையை சொன்னாலும், அதனை பொய் என்று சொல்லுவார்கள். சமீபத்தில் பல்நோக்கு மருத்துவமனை விவகாரத்திலும் அதே போக்கை கடைப்பிடித்தனர்” என்று கூறினார்.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பாக, திமுக தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கும் போது, சரத்குமார், “100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு 125 நாட்களாக உயர்த்தியுள்ளது. வேலை நடைபெறும் இடங்களை ஆய்வு செய்து, அந்த இடங்களிலேயே பணிகள் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். இதில் மாநில அரசு 40 சதவீதம் பங்களிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளோம்” என்று விளக்கினார்.

மத்திய அரசு கொண்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து, “நலத்திட்டங்கள் நல்லதாக இருந்தால், திமுக அதை செய்ததாக கூறுவார்கள்; உடன்பாடு இல்லையெனில், மத்திய அரசை குறை கூறுவதே வழக்கமாக உள்ளது” என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுகம் ராஜேஷ், மாநில நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள், அணி மற்றும் பிரிவு தலைவர்கள், பல்வேறு பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.