தேர்தலை நோக்கி திமுக அரசியல் பணிகள் தீவிரம் – அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஒரே குரலில் அழைப்பு

DMK News

தேர்தலை நோக்கி திமுக அரசியல் பணிகள் தீவிரம் – அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஒரே குரலில் அழைப்பு

தூத்துக்குடி, டிச.31 :

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஆளும் கட்சியான திமுக ஆட்சியை தக்கவைக்க தீவிரமான அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முதலமைச்சர் முதல் அமைச்சர்கள், எம்.பிக்கள், மேயர்கள், எம்.எல்.ஏக்கள் வரை மக்கள் பிரதிநிதிகள் முழுமையாக தேர்தல் பணிகளில் இறங்கியுள்ள நிலையில், தூத்துக்குடியில் நடைபெற்ற இருவேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி ஒரே மாதிரியான கருத்துகளை முன்வைத்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் திமுக ஆதரவுக்கான அழைப்பை விடுத்துள்ளனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட தலைவர் மீராசா தலைமையில் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அவர் பேசுகையில், “24 மணி நேரமும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு உழைத்துக் கொண்டே இருக்கிறது. அதன் பயனாக தமிழகம் இன்று அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டணியை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்ற ஒரே நோக்குடன் அதிமுக – பாஜக செயல்பட்டு வருகிறது. அதனை முறியடிக்க ஒற்றுமையுடன் இருந்து, ஒரு வாக்கு கூட சிதறாமல் திமுக கூட்டணிக்கு கிடைக்க அனைவரும் பாடுபட வேண்டும். மீண்டும் திமுக ஆட்சி மலர வேண்டும்” எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் அபூபக்கர் பேசுகையில்,“2026 தேர்தலில் இஸ்லாமியர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு திமுக கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெற உழைக்க வேண்டும்” என வலியுறுத்தினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தலைவர் மீராசா, ’வருகிற ஜனவரி 28ஆம் தேதி கும்பகோணத்தில் மகத்துல்லா ஜமாத் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இஸ்லாமிய மக்களின் கோரிக்கைகள் இந்த மாநாட்டின் மூலம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். புதிதாக அரசியலுக்கு வந்த நடிகர் விஜய்க்கு இஸ்லாமியர்களின் ஒரு வாக்கு கூட கிடைக்காது. அவரின் அரசியல் பலம் இதுவரை தெரியவில்லை. சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்கே வாக்களிப்போம். தமிழ்நாட்டில் நிம்மதியாக வாழ்ந்து வருவதற்கு திராவிட மாடல் ஆட்சி தான் காரணம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எப்போதும் திமுக கூட்டணியிலேயே தொடரும்” என்றார்.

இதில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் மும்தாஜ், முன்னாள் பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், நிர்வாகிகள் ரகுமான், மீராசா, மணி அல்பட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில், 31வது வார்டுக்குட்பட்ட 305ஆம் பாகத்தில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற தேர்தல் முன்னெடுப்பு பணிக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டச் செயலாளர் பாலகுருசாமி தலைமை வகித்தார். பிஎல்ஏ-2 முருகன் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, “கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் நேரில் சென்று திமுக அரசு செய்த சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக எந்த வளர்ச்சி பணிகளையும் செய்யாமல் கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது கடும் நிதி நெருக்கடி இருந்தது. அதனை மீறி முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பெண்கள், மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை போன்ற திட்டங்கள் நாட்டிற்கே முன்னோடி திட்டங்களாக விளங்குகின்றன. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்து, இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வர அனைவரும் உழைக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் கனகராஜ், பகுதிச் செயலாளர் ரவீந்திரன், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், பாகமுகவர்கள் ராமர், ராஜ்குமார், முருகேசன், மதன், லட்சுமிதேவி, தனலட்சுமி, லட்சுமணன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இருவேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்த கருத்துகள், 2026 தேர்தலை முன்னிட்டு திமுக அரசியல் பணிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ளதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.