காசி–தமிழ் சங்கமம் 4.0 : காசி முதல் ராமேஸ்வரம் வரை கலாச்சாரப் பாலம்

kasi - Rameshwaram

காசி–தமிழ் சங்கமம் 4.0 : காசி முதல் ராமேஸ்வரம் வரை கலாச்சாரப் பாலம்

தமிழகத்திற்கும் காசிக்கும் உள்ள தொன்மையான கலாச்சார, ஆன்மீக தொடர்பை வலியுறுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் 4.0 விழா உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த டிசம்பர் 2 முதல் 15 வரை சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழகத்திலிருந்து மாணவர்கள், விவசாயிகள், கலைஞர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்று காசி–தமிழ் பண்பாட்டு உறவை மேலும் வலுப்படுத்தினர்.

இந்த விழாவின் நிறைவு விழா நேற்று ராமேஸ்வரம் நகரில் நடைபெற்றது. விழாவிற்கு துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக ஆளுநர் ஆர்.எம்.ரவி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, தமாக தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் பேசுகையில்,“இந்த தேசம் வாழ்க என்று சொல்வதால் நாம் தமிழுக்கு எதிரானவர்கள் ஆக மாட்டோம். தொன்மையான காசி நகரமும் உலகின் தொன்மையான தமிழ் மொழியும் இணைவதே காசி தமிழ் சங்கமம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். காசியும் ராமேஸ்வரமும் பிரிக்க முடியாத புண்ணிய நகரங்கள். அதனால்தான் காசியில் தொடங்கிய சங்கமம் ராமேஸ்வரத்தில் நிறைவடைந்துள்ளது” என்றார்.

மேலும்,“உலகின் ஆன்மீகத் தலைநகரான காசி பாரதத்தின் பண்பாட்டு மையமாக விளங்குகிறது. தேவாரம், திருவாசகம் ஒலிக்கும் தளத்தில் கபீரின் பக்திப் பாடல்களும் ஒலிக்கின்றன. முகலாயர் காலத்தில் காசி கோயிலுக்கு ஆபத்து ஏற்பட்டபோது, தமிழகத்திலும் பாண்டிய நாட்டிலும் இருந்து காசியை காக்க போராடிய வரலாறு உண்டு. நாட்டின் தன்மானத்திற்கும் தர்மத்திற்கும் பாதிப்பு வரும்போது அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” எனக் கூறினார்.

மகாகவி பாரதி குறித்து குறிப்பிட்ட அவர்,“எட்டயபுரத்திலிருந்து சென்ற பாரதி காசி அரசவையை அலங்கரித்தவர். அவர் இந்திய தேசத்தைப் பற்றியே கனவு கண்டார். பாரதி கண்ட இந்திய கனவு இன்று பிரதமர் மோடி தலைமையில் நிறைவேறி வருகிறது. அரசின் திட்டங்கள் அனைத்தும் தமிழரின் பெருமையையும் இந்தியாவின் பெருமையையும் நிலைநாட்டுவதாக உள்ளது” என்றார்.

மேலும்,“கவர்னர் ரவி தமிழில் பேசியதை கேட்டபோது நானும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு வந்தது. தமிழகத்தில் யார் சொத்துக்கும் ஆசைப்படாத சூழல் உருவாக வேண்டும். உலகின் உன்னத நிலைக்கு பாரதம் வர வேண்டும்; அதில் தமிழகமும் உச்சத்தை தொட வேண்டும். எந்த இடத்தில் இருந்தாலும் அகங்காரம் இல்லாமல் மக்களின் ஒருவராக இருப்பேன். என்றைக்கும் பாரத தேசம் ஒன்றுதான்” என உரையாற்றினார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில்,“கலாச்சாரம், பண்பாட்டில் காசியும் தமிழகமும் சிறந்து விளங்குகின்றன. தமிழை உலகம் முழுவதும் முன்னிறுத்தியவர் பிரதமர் மோடி. அயோத்தியிலும், ஐநா சபையிலும் தமிழை அவர் உயர்த்திப் பேசியுள்ளார். பாண்டிய மன்னர்கள் காலத்தில் மதுரையில் தமிழ் சங்கம் நடந்தது போல, இன்று பிரதமர் மோடி தமிழை முன்னிறுத்தும் நவீன கால பாண்டிய மன்னனாக விளங்குகிறார்” என்றார்.

மேலும்,“கங்கைகொண்ட சோழபுரத்தை உலகிற்கு அடையாளம் காட்டியவர் பிரதமர் மோடி. சேர–சோழ–பாண்டிய மூவேந்தர்கள் போல இந்திய நாட்டின் மூவேந்தராக அவர் செயல்படுகிறார். சீர், அடி, தொடை என இலக்கண கட்டுப்பாடுடன் உள்ள தமிழ் மொழி சாகா வரம் பெற்றது. எல்லா மாநிலங்களிலும் தமிழ் கற்க வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளார். உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் பிரதமர் மோடியை புகழ வேண்டும்” எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து,வாரணாசியில் இருந்து தமிழகத்திற்கு வந்து தமிழ் கற்ற மாணவர்கள் மித்ருன்ஜெகுமார் சிங், அகன்ஷா சிங்   ஆகியோர் பேசுகையில், “தமிழகத்திற்கு வந்து 10 நாட்களில் ‘வணக்கம், எப்படி இருக்கீங்க, நன்றி’ போன்ற அடிப்படை தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொண்டோம். தமிழகத்தின் உணவு முறை மிகவும் பிடித்தது. பழமையான தமிழ் மொழியை கற்றதில் பெருமை. ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், சொற்கள் புரிந்தபின் ஆர்வத்துடன் தமிழ் கற்றோம்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

காசி முதல் ராமேஸ்வரம் வரை ஆன்மீகமும் பண்பாடும் இணையும் இந்த காசி தமிழ் சங்கமம் 4.0, தமிழும் இந்தியமும் பிரிக்க முடியாத ஒன்றே என்பதை மீண்டும் உறுதி செய்ததாக கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.