திருத்தணி கஞ்சா போதை தாக்குதல்: விஸ்பரூபமாகிறது ஒடிசா வாலிபர் சொந்த மாநிலத்திற்கு அனுப்பப்பட்ட விவகாரம்

Crime

திருத்தணி கஞ்சா போதை தாக்குதல்: விஸ்பரூபமாகிறது ஒடிசா வாலிபர் சொந்த மாநிலத்திற்கு அனுப்பப்பட்ட விவகாரம்

திருத்தணி / சென்னை:

திருத்தணி ரயில் நிலையம் அருகே கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் நான்கு பேர் சரமாரியாக வெட்டி படுகாயம் அடையச் செய்த ஒடிசா மாநில வாலிபர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அவசர அவசரமாக சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் (20) என்பவர் கடந்த 27ஆம் தேதி திருத்தணி ரயில் நிலையம் அருகே உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில், திருத்தணி போலீசாரால் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் திருவள்ளூர் அரசு மருத்துவமனை, அதன்பின் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார்.

சமூக வலைதளங்களில் அதிர்ச்சி வீடியோ

கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, திருத்தணி மற்றும் அரக்கோணத்தைச் சேர்ந்த பிளஸ்–2 மாணவர் உட்பட நான்கு சிறுவர்களை போலீசார் கைது செய்து, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

சொந்த மாநிலத்திற்கு அனுப்பப்பட்ட விவகாரம்

சென்னை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் இல்லை. இதுகுறித்து போலீசார், “பாதிக்கப்பட்டவர் தன்னிச்சையாக, எழுத்துப்பூர்வ சம்மதம் அளித்து சொந்த மாநிலத்திற்குச் சென்றுள்ளார்” என விளக்கம் அளித்தனர். ஆனால், மாநில அரசின் ஏற்பாட்டின்பேரில் அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்

எடப்பாடி பழனிச்சாமி (அதிமுக பொதுச் செயலாளர்): திருத்தணி சம்பவம் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதற்கான சான்று என குறிப்பிட்ட எடப்பாடி பழனிச்சாமி, “திமுக ஆட்சியில் போதைப்பொருள் கலாச்சாரம் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இளைஞர்களின் எதிர்காலம் அழிவின் பாதையில் தள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் (தமிழ்நாடு பாஜக தலைவர்): “திருத்தணி தாக்குதல் சம்பவம் தமிழகம் போதைப்பொருள் வலையமைப்பின் பிடியில் சிக்கியுள்ளதை வெளிப்படுத்துகிறது. சிறுவர்களே கொலை முயற்சியில் ஈடுபடும் அளவுக்கு நிலை மோசமாகியுள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு முழுமையான பாதுகாப்பும், நீதி கிடைப்பதும் உறுதி செய்யப்பட வேண்டும்” என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை (பாஜக முன்னாள் தலைவர்): “கஞ்சா, 

போதைப்பொருள் புழக்கம் குறித்து தொடர்ந்து எச்சரித்தும் திமுக அரசு அலட்சியம் காட்டி வருகிறது. இன்று அதன் விளைவாக பொதுமக்கள், குறிப்பாக வெளியூரில் இருந்து வரும் இளைஞர்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். போதைப்பொருள் மாபியாக்களை ஒடுக்க திமுக அரசுக்கு மனசாட்சியே இல்லை” என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “திமுக ஆட்சியில் போதைப்பொருள் இளம் தலைமுறையை முற்றிலும் சீரழித்துள்ளது என்று கொதித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், “இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்க அரசு தோல்வியடைந்துள்ளது” என்று விமர்சித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “தமிழகம் போதைப்பொருட்களின் புகலிடமாக மாற்றப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். விசிக எம்பி ரவிக்குமார், “சிறார்களை பயன்படுத்தி குற்றங்கள் செய்யப்படுவது மிக ஆபத்தான போக்கு”என கருத்து கூறியிருக்கிறார். 

இந்த விவகாரத்திற்கு வடக்கு மண்டல ஐஜி அசரா கார்க் செய்தியாளர்களிடம், தாக்குதல் வட மாநில வாலிபர் என்பதற்காக நடத்தப்படவில்லை. போதைப்பொருள் பயன்படுத்திய நிலையிலேயே சிறார்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாதிக்கப்பட்டவர் சொந்த விருப்பத்தின்பேரிலேயே சொந்த மாநிலம் சென்றுள்ளார். வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் போதிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்று விளக்கம் அளித்தார்.

ஆக, திருத்தணி சம்பவம் தமிழகத்தில் போதைப்பொருள், சிறார் குற்றங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு குறித்த கவலைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட வாலிபரை சொந்த மாநிலத்திற்கு அனுப்பிய விவகாரம் அரசியல் ரீதியாக புதிய விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மீது பொதுமக்களின் கவனம் குவிந்துள்ளது.