தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை : அனுமதி கேட்டு நீதிமன்றம் செல்லுள்ள வேதாந்தா
Sterlite News
தூத்துக்குடி,டிச.19:
தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி வழங்கக் கோரி, தமிழக தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர்களுக்கு ஜூன் முதல் நவம்பர் வரை அனுப்பப்பட்ட ஆறு மனுக்களை இதுவரை பரிசீலிக்கவில்லை எனக் கூறி, அவற்றை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வேதாந்தா குழுமம் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்துள்ளது.
தூத்துக்குடியில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலை, விரிவாக்கம் பணியில் ஈடுபட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் காற்று, நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசு தொடர்பான காரணத்தை சொல்லி புகார்கள் எழுப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆலை விரிவாக்கத்திற்கு எதிராக தொடங்கிய போராட்டம், ஆலைக்கு எதிராக திரும்பியது. போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்தது. இந்த விவகாரம் தேசிய அளவில் கவனத்தை பெற்றது. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூட உத்தரவிட்டது.
அதன் பின்னர், பல்வேறு சட்டப்போராட்டங்கள் நடைபெற்ற போதிலும், ஆலை மீண்டும் செயல்படக் கூடாது என்ற அரசின் நிலைப்பாடு தொடர்ந்தது. இந்நிலையில், வேதாந்தா குழுமம், பழைய ஸ்டெர்லைட் ஆலை அல்ல; மாறாக, நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறி, அனுமதி கோரும் முயற்சிகளை சமீப காலமாக மேற்கொண்டு வருகிறது.
வேதாந்தா தரப்பு விளக்கத்தின் படி, பசுமை தாமிர உற்பத்தி என்பது சுற்றுச்சூழலுக்கு மிகக் குறைந்த பாதிப்பு ஏற்படும் வகையில் தாமிரம் உற்பத்தி செய்வதாகும். இதில் குறைந்த மாசு தொழில்நுட்பங்கள், கழிவுநீர் வெளியேற்றமில்லா ‘Zero Liquid Discharge’ முறை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு மற்றும் தொடர்ச்சியான ஆன்லைன் மாசு கண்காணிப்பு போன்ற அம்சங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த கால ஸ்டெர்லைட் ஆலையில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படாது என்றும் வேதாந்தா தரப்பு கூறுகிறது.
ஆனால், இந்த முயற்சிக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் சந்தேகங்களை முன்வைத்து வருகின்றன. ‘பசுமை’ என்ற பெயரில் பழைய அனுபவங்கள் மீண்டும் தொடருமா, கடந்த கால பாதிப்புகளுக்கு உரிய பொறுப்பு ஏற்கப்பட்டுள்ளதா, மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் வெளிப்படையான கண்காணிப்பு அமைப்புகள் உறுதி செய்யப்படுமா என்பதே அவர்களின் முக்கிய கேள்விகளாக உள்ளன.
இந்த நிலையில், 2025 ஜூன் முதல் நவம்பர் வரை தமிழக தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர்களுக்கு அனுப்பப்பட்ட ஆறு மனுக்கள் எந்த முடிவுக்கும் வராமல் உள்ளதாக வேதாந்தா குற்றம் சாட்டியுள்ளது. நிர்வாக மௌனம் நீடிப்பதாகவும், இது சட்டப்படி பரிசீலிக்கப்பட வேண்டிய மனுக்களாக இருப்பதால், அவற்றை பரிசீலிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் வேதாந்தா தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், பசுமை தாமிர ஆலை அமைப்பது தொடர்பாக, அரசுத்துறை செயலர்களுக்கு மனு மட்டுமே அனுப்பபட்டு உள்ளதே தவிர முறையாக விண்ணப்பிக்க வில்லை என தெரிவிக்கபட்டது. அப்போது மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருந்து அபாயகரமான கழிவுகள்கை அப்புறப்படுத்தக் கோரிய வழக்கு நிலுவையில் உள்ளது என மனுதாரர் மற்றும் அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள், நிலுவையில் உள்ள வழக்குடன், இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிடும்படி உத்தரவிட்டனர். விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர். தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை தொடர்பான இந்த புதிய வழக்கு, தொழில்துறை வளர்ச்சி ஒருபுறம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மக்கள் நம்பிக்கை மறுபுறம் என்ற இரு முனைகளுக்கிடையேயான சமநிலையை மீண்டும் விவாதத்தின் மையமாக கொண்டு வந்துள்ளது.
nadunilai.com