உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட கள ஆய்வு - ஏமாற்றத்தில் தூத்துக்குடி வட்டார மக்கள்
Collector News
தூத்துக்குடி வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து இரண்டு நாட்களாக மாவட்ட கலெக்டர் இளம்பகவத், கள ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டு மென்ற நோக்கத்தின் அடிப்படையில் மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தொடங்கப்பட்ட உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாதம் ஒரு தாலுகாவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு தீர்வு கண்டு வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி தாலுகாவில் கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் இளம்பகவத் கள ஆய்வு மேற்கொள்வார் என்கிற அறிவிப்பு இம்மாதம் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அவ்வாறு கள ஆய்வுக்கு வரும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வசதியாக பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கடந்த 5ம் தேதி தாசில்தாரிடம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தபட்டதின் அடிப்படையில் அன்று(5ம்தேதி)புதுக்கோட்டை ஆர்.ஐ அலுவலகத்தில் நடத்தப்பட்ட அட்வான்ஸ் முகாமில் வைத்து பொதுமக்கள் பலரும் மனுக்களை கொடுத்தனர்.
அதில் புதுக்கோட்டைக்கு மேற்கில் இருந்து வரும் பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் வராமல் தூத்துக்குடி நோக்கி சென்றுவிடுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்ட பிறகு அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதி மக்கள் ஊருக்கு வெளியில் இறங்கி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உடனடி நடவடிக்கையாக புதுக்கோட்டை ஊருக்குள் பேருந்துகளை வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தர தீர்வாக புதுக்கோட்டை பழைய பாலத்தில் புதிய பாலம் கட்டி அந்த வழியாக போக்குவரத்தை துவக்க வேண்டும். அப்படி செய்வதன் மூலம் இரு மார்க்கத்திலும் இருந்து வரும் பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்ல வழி பிறக்கும் என்கிற கோரிக்கை மனுக்களும் வழங்கப்பட்டது. அதுபோல் போடம்மாள்புரத்தில் இடிந்து போன ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை மெயின் ரோடு அருகே புதிய இடத்தில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை மனுக்களும் வழங்கப்பட்டது. இந்த இரண்டு மனுக்களின் சரத்துகளும் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு திட்ட அறிக்கை வரை தயார் செய்துள்ளவைகள்தான். இதனை கலெக்டர் பார்வையிட்டு சென்றால் இத்திட்டங்கள் நிறைவேறும் என்று பொதுமக்கள் நம்பி காத்திருந்தனர்.
ஆனால் முதல் நாளான நேற்று(18ம் தேதி)காலை முதல் தூத்துக்குடி வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு, பிற்பகலில் மாவட்ட நிலையிலான அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இரண்டாவது நாளான இன்று(19ம்தேதி) காலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 15வது வார்டு செல்வ காமாட்சி நகரில் மழை காலங்களில் வெள்ளநீர் தேங்குவதை தடுப்பது குறித்து மேற்கொள்ள வேண்டிய தடுப்புப் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, குமாரகிரி ஊராட்சிக்குட்பட்ட புதுக்கோட்டை பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு மற்றும் குளோரின் சரியான அளவில் உள்ளதா என்பது குறித்து கலெக்டர் இளம்பகவத், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, குடிநீர் சீராக வழங்கப்படுவது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மேலும், புதுக்கோட்டை புனித அகஸ்டின் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, காலை உணவு திட்ட ஊழியர்களிடம் உணவுகள் சரியான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்தும், உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்து, சரியான முறையில் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு பரிமாறப்படுகிறதா என கேட்டறிந்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். ஆனால் போடம்மாள்புரத்திற்கோ, புதுக்கோட்டை போக்குவரத்து பிரச்னைக்குரிய இடங்கலையோ கலெக்டர் பார்வையிட்டதாக தெரியவில்லை. ஏற்கனவே உள்ள அரசு திட்ட வேலைகள், கல்வி நிலையங்கள், போலீஸ் ஸ்டேசன் என்று அலுவலகங்களை ஆய்வு செய்துவிட்டு இப்பகுதி மக்களின் பிரச்னைகளை நேரில் பார்க்காமல் சென்றுவிட்டார். உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்று இந்த கள ஆய்விற்கு பெயர் வைத்திருப்பதால் கோரிக்கை மனு கொடுத்தவர்களிடம் நேரடி விசாரணை இருக்கும் என்றும் நம்பினர். ஆனால் திட்டமிட்ட சில பகுதிகளை மட்டும் பார்வையிட்டுவிட்டு கலெக்டர் சென்றுவிட்டார். கொடுத்த மனுவிற்கு என்ன பதில் யார் தருவார் என்று கோரிக்கை வைத்துள்ளோர் காத்திருக்கின்றனர்.
இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், மாநகராட்சி துணைப் பொறியாளர் சரவணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் குமார், தூத்துக்குடி வட்டாட்சியர் முரளிதரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
nadunilai.com