கூட்டாம்புளியில் பொங்கல் பரிசுத் தொகுப்பை கலெக்டர் இளம்பகவத் வழங்கினார்
Thoothukidi collector

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5.30 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று (9ம் தேதி) முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. கூட்டாம்புளியில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத், தூத்துக்குடி, செல்வநாயகபுரத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதை துவக்கி வைத்தனர்.
இந்தாண்டு பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு தமிழகத்திலுள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 9.1.25 சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம், சைதாப்பேட்டை, சின்னமலை நியாய விலைக் கடையில் அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம்,குமாரகிரி ஊராட்சி,கூட்டாம்புளி நியாய விலைக் கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா ஆகியோர் உடனிருந்தனர். அதேபோல் தூத்துக்குடி, செல்வநாயகபுரத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 988 நியாயவிலைக் கடைகள் மூலம் 5 லட்சத்து 30 ஆயிரத்து 261 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 500 குடும்பங்கள் ஆகியோருக்கு ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இன்று(ஜன.9ம்தேதி) முதல் டோக்கன் வரிசை அடிப்படையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. மின்னணு குடும்ப அட்டையில்(ஸ்மார்ட் ரேசன் கார்டு)இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் நியாய விலைக் கடைக்குச் சென்று தங்களது கைவிரல் ரேகையினைப் பதிவு செய்து பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட செல்வநாயகபுரம் பகுதியிலுள்ள நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து பயனாளிகளுக்கு கரும்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இதில் வட்ட செயலாளர்கள் ரவிந்திரன், முனியசாமி, மாவட்ட பிரதிநிதி நாராயணன், நிர்வாகிகள் அருணகிரி, பாலசுப்பிரமணியன்,குமார், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர், நியாயவிலை கடை பணியாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.