தமிழகத்தில் சாலை வரி உயர்வு - நள்ளிரவு முதல் அமல்

Increase road tax

தமிழகத்தில் சாலை வரி உயர்வு - நள்ளிரவு முதல் அமல்

தமிழகத்தில் வாகனங்களிக்கான சாலை வரி உயர்வு நள்ளிரவு முதல் அமலானது. இதனால், இருசக்கர வாகங்கள்,கார்களின் விலை உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில்,150 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், யூனிட் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இருசக்கர வாகனம்,கார் உள்பட தினமும் 8,000 புதிய வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்படுகின்றன. வாகங்களின் மொத்த விலையில் கணக்கீடு செய்து, சாலை வரி விதிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்களுக்கு 8 சதவீதம், கார்களின் வகைகளுக்கு ஏற்றார்போல் 10 - 15 சதவீதம் வரை சாலை வரி விதிக்கப்படுகிறது. கடந்த 2010ம் ஆண்டுக்கு பிறகு சாலை வரியில் மாற்றம் செய்யப்படவில்லை. சாலை வரியை உயர்த்த தமிழக போக்குவரத்து ஆணையரகம், சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதற்கான அரசாணை நேற்று முன்தினம் (7.11.2023) வெளியிடப்பட்ட நிலையில், புதிய சாலை வரி உயர்வு நள்ளிரவு முதல் அமலாகி உள்ளது. இது குறித்து தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது : மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் சாலை வரி குறைவு. புதிய வாகனங்களுக்கு சாலை வரி, 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர, சாலை பாதுகாப்பு வரி, பழைய வாகங்கள், வாகங்களுக்கு எடைக்கு ஏற்றார்போல் வரி உயர்த்தப்பட்டு உள்ளது. 

இந்த புதிய வரி உயர்வு 9ம் தேதி முதல் அமலாகிறது. இதன் வாயிலாக, தமிழக அரசுக்கு கணிசமாக வருவாய் கிடைக்கும். இவ்வாறு அவர்கல் கூறினர். 

இது குறித்து வாகன விற்பனையாளர் கூறியதாவது : தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ல புதிய சாலை வரியால், கார், இருசக்கர வாகங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது, இருசக்கர வாகனங்களுக்கு கூடுதலாக, 25,000 ரூபாய் வரையிலும் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

தற்போதைய நிலவரப்படி இருசக்கர வாகனங்கள் 1 லட்சம் ரூபாய் விலை வரை 8 சதவீதம் வரி கட்ட வேண்டும். புதிய வரி விதிப்பால் 10 சதவீதம் வரி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுவே ஒரு லட்சத்துக்கு மேல் விலை உள்ள இருசக்கர வாகனங்களுக்கு பழையது 8 சதவீதம்தான். தற்போது 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

1 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை விலை உள்ள கார்களுக்கு பழைய வரி 10 சதவீதம் இப்போது அது 13 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை உள்ள கார்களுக்கு பழைய வரி 15 சதவீதமாகும். அது இப்போது 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. 20 லட்சத்துக்கு மேல் விலை உள்ள கார்களுக்கு 20 சதவீதம் என நிர்ணகிக்கப்பட்டுள்ளது.