தூத்துக்குடியில் நாளை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 102வது நிறுவன தின விழா - ஆளுநர் தமிழிசை பங்கேற்கிறார்

Tamilnad Mercantile Bank Ltd

தூத்துக்குடியில் நாளை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 102வது நிறுவன தின விழா - ஆளுநர் தமிழிசை பங்கேற்கிறார்

தூத்துக்குடியில் நாளை (10ம்தேதி) தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 102வது நிறுவன தின விழா நடைபெறுகிறது. இதில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு சேலம் பேளூர் கிளையை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். 

இதுகுறித்து தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பொது மேலாளர் (திட்டம்)டி.இன்பமணி, ’’தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி 1921 ம் ஆண்டு தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இதன் நிறுவன தின விழா ஆண்டுதோறும் நவம்பர் 11ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த முறை தீபாவளி பண்டிகை வருவதால் நாளை (10 ம் தேதி) 102வது நிறுவன தின விழா கொண்டாடப்படுகிறது. இதற்கான விழா தூத்துக்குடி ஏ.வி.எம் மஹாலில் நாளை (வெள்ளிக்கிழமை)மதியம் 12.30 மணிக்கு நடைபெறுகிறது. 

இதில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் கலந்து கொண்டு பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கி, புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும் வங்கியின் 544 மற்றும் 545 வங்கி கிளைகள் திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் தொடங்கப்படுகிறது. இதில் சேலம் மாவட்டம் பேளூர் வங்கி கிளையை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் வங்கித்தலைவர், இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.    

நிறுவன தின விழாவை முன்னிட்டு வங்கியின் பல்வேறு  கிளைகளிலும் ரத்ததான முகாம், கண் சிகிச்சை முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றது. தொடர்ந்து இன்னும் சில தினங்களுக்கு  பல்வேறு வங்கி கிளைகளில் ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது’’ என்றார். 

பேட்டியின் போது வங்கியின் இயக்கம் மற்றும் சேவை துறை துணைப் பொதுமேலாளர் பி.ஆர்.அசோக்குமார் உடனிருந்தார்.