தேசிய கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டாஸ் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
National news
பாரத தேசம் பல நூறு ஆண்டுகள் அந்நியனிடம் அடிமைப்பட்டுக்கிடந்தது. அதில் இருந்து விடுதலை பெற்றதை நாம் வருடம் தோறும் சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறோம். அன்றைய நாளில் நாம் தேசிய கொடியை ஏற்றி மகிழ்கிறோம். அதேவேளை சில போராளிகள், அந்த நாளில் எதாவது ஒரு காரணத்தை சொல்லி சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுபோல் நடந்து கொள்கின்றனர்.
இது தேசத்தை உண்மையாக நேசிக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் கவலை அளிப்பதாக இருந்து வருகிறது. அந்நிய அடிமைகாலத்தில் அனுபவித்த துன்பத்தை அறியாதவர்களாக, சில அரசியல் காரணங்களுக்காக சிலர் அப்படி செயல்படுகின்றனர். இது தேசத்துக்கும், தேசியத்துக்கும் நல்லது அல்ல, எதாவது செய்தாக வேண்டும் என்று நடுநிலையாளர்கள் குமுறிவருகின்றனர். சுதந்திரத்தினத்தை முழுவதுமாக கொண்டாடுவதில் இடையூறுகளை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசியவாதிகள் வேண்டி வருகின்றனர். இதுக்கிடையில் வரும் 15ம் தேதி 78வது சுதந்திரதினம் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக தமிழகத்தில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று(11.08.2024)காலையில் நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்குகளை விசாரிக்க துவங்கும்போது, சுதந்திரத்தினத்தை முன்னிட்டு தங்கள் பகுதி குடியிருப்பு நல சங்கத்தின் முன்பாக கொடியேற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் சிலர் தடுப்பதை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும் அதனை நாளையே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் முறையிட்டார். அப்போது, தேசிய கொடியேற்ற பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதி, சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானமாகும். தேசிய கொடியேற்றுவதை யாரும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுப்போர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம் என்று தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு கோடிக்கணக்கான தேசியவாதிகளின் நெஞ்சத்திற்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.