தூத்துக்குடி - சாயர்புரம் - திருவைகுண்டம் வழித்தட பேருந்து தடம் எண் 578 முறையாக இயக்கம் - கிராம மக்கள் வரவேற்பு

Bus news

தூத்துக்குடி - சாயர்புரம் - திருவைகுண்டம் வழித்தட பேருந்து தடம் எண் 578 முறையாக இயக்கம் - கிராம மக்கள் வரவேற்பு

தூத்துக்குடி - சாயர்புரம் - திருவைகுண்டம் - திருநெல்வேலி இடையே உரிய நேரத்தில், உரிய வழித்தடத்தில் முறையாக இயக்கத்தை தொடங்கியுள்ள தடம் எண் 578 என்கிற பேருந்திற்கு கிராம மக்கள் மாலை அணிவித்து, வரவேற்பு அளித்தனர்.  

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் - சிவகளை - பண்டாரவிளை - சாயர்புரம் - சேர்வைகாரன்மடம் -கூட்டாம்புளி-புதுக்கோட்டை - தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி இடையே தடம் எண் 578 என்கிற அரசு பேருந்து இயக்கப்படுகிறது. வழித்தட மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள இப்பேருந்து, தூத்துக்குடியில் காலை 9.45 மணி மற்றும் மாலை 5.45 மணியில் கிளம்பக் கூடியதாகும். ஆனால் சமீபகாலமாக காலையில் திருவைகுண்டத்தில் கிளம்பி தூத்துக்குடிக்கு வரும் இப்பேருந்து, அங்கிருந்து 9.45 மணிக்கு எடுத்து மீண்டும் திருவைகுண்டத்திற்கு செல்லாமல் வேறு இடங்களுக்கு மாற்றிவிடப்பட்டு வந்தது. திருவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கே தாமதமாக 10.00 மணிக்கு வருவதுதான் அதற்கு காரணமாக இருந்து வந்தது. இதனால் அடுத்த தடவையும்(மாலை 5.45 மணி) இந்த பேருந்து வழித்தடத்திற்கு சரிவர வராமல் போனதும் நடந்து வந்தது. எனவே  வழித்தட பொதுமக்களுக்கு இதன் சேவை முழுமையாக கிடைக்காமல் போனது. 

அப்படியானால் திருவைகுண்டத்தில் அப்பேருந்தை அதன் பழைய உரிய கால நேரமான 7.55 மணிக்கு கிளம்ப செய்வதுதான் அதற்கு சரியான தீர்வு என்று பொதுமக்கள் கருதினர். எனவே இது குறித்து சேர்வைகாரன்மடம் ஊராட்சி உப தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா மற்றும் பொதுமக்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துகழக துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆகியோர்களிடம் மனுக்கள் மூலம் கோரிக்கை வைத்தனர். 

அதன்பேரில் இப்பேருந்து தற்போது திருவைகுண்டத்தில் அதன் உரிய நேரமான காலை 7.55 மணிக்கு கிளம்பி பயணத்தை தொடங்கி, தூத்துக்குடிக்கு 9.30 மணிக்கு சென்று அங்கிருந்து 9.45 மணிக்கு கிளம்பி மீண்டும் அதேவழித்தடத்தில் திருவைகுண்டம் செல்கிறது. அதுபோல் மாலை 4.00 மணிக்கு திருவைகுண்டத்தில் கிளம்பி மீண்டும் அதே வழித்தடத்தில் தூத்துக்குடிக்கு 5.30 மணிக்கு வருகிறது. அங்கிருந்து 5.45 மணிக்கு கிளம்பி மீண்டும் அதன் வழித்தடத்தில் திருவைகுண்டம் செல்கிறது.  இதனால் வழித்தட கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இந்தநிலையில் இன்று(14.08.2024) சக்கம்மாள்புரத்தில் வைத்து சேர்வைகாரன்மடம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா, உறுப்பினர் குணபாலன் மற்றும் அப்பகுதி மக்கள், அப்பேருந்திற்கு வரவேற்பு அளித்தனர். பேருந்திற்கு மாலை அணிவித்து, பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.  

இது குறித்து ஏஞ்சலின் ஜெனிட்டா, எங்கள் கிராம மக்களுக்கு மிகவும் பயன்பட்டு வரும் பேருந்து தடம் எண் 578. திருவைகுண்டத்தில் அப்பேருந்து லேட்டாக கிளம்பும் போது தூத்துக்குடிக்கு சென்று மீண்டும் எங்கள் வழித்தடத்துக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. வராமல் அப்படியே வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர். நாங்கள் முதலமைச்சருக்கும், மாவட்ட கலெக்டருக்கும், அமைச்சர், எம்.எல்.ஏவுக்கும் மனுக்கள் மூலம் கோரிக்கை வைத்தோம். நடவடிக்கை எடுக்கப்பட்டத்தின் அடிப்படையில் இப்போது அப்பேருந்து காலை, மாலை என இரண்டு தடவையும் அதன் உரிய நேரத்தில் இயக்கப்படுகிறது. இதனால் எங்கள் பகுதி மக்கள் பயனடைந்து வருகின்றனர் என்றார்.  

மேலும், கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சித்தலைவருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும், நடவடிக்கை மேற்கொண்ட போக்குவரத்து கழக துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.