தூத்துக்குடியில் தொழில் தொடங்க J.S.W நிறுவனம் 10,000 கோடி.. VinFast Auto Ltd நிறுவனம் 16,000 கோடி.. 8000 பேருக்கு வேலைவாய்ப்பு.. - கலெக்டர் தகவல்

MSME NEWS

தூத்துக்குடியில் தொழில் தொடங்க J.S.W நிறுவனம் 10,000 கோடி.. VinFast Auto Ltd  நிறுவனம் 16,000 கோடி.. 8000 பேருக்கு வேலைவாய்ப்பு.. - கலெக்டர் தகவல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் இன்று 07.01.2024  நடைபெற்று வரும் தமிழ்நாடு - உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2024யை தொடங்கி வைத்து விழாப் பேருரை ஆற்றுகின்ற இந்த நிகழ்வை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பார்வையிட்டார். 

அப்போது அவர், தொழில் துறையில் மேன்மையும் தனித்த தொழில்வளமும் கொண்ட மாநிலம்தான். தமிழ்நாடு! பண்டைய காலத்தில் இருந்து கடல் கடந்தும் வாணிபம் செய்தவர்கள். இந்தியாவில் தமிழ்நாடு அனைத்து வகைத் தொழில்களிலும், முன்னேறிய மாநிலமாக இன்றைக்கு இருக்கிறது. முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து சேவை ஆதரவுகளையும் தமிழ்நாடு அரசு அளித்து வருகிறது. 

தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் J.S.W நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் தொடங்க 10,000 கோடி, VinFast Auto Ltd  நிறுவனம்  16,000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தங்களால் 8000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இது மகிழ்ச்சியான செய்தியாகும். 

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அதிகனமழையினால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கி கடன் வழங்குவதற்கும், வாகனங்களுக்கு காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் காப்பீடு பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் இதற்கான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

கன்னியாகுமரி, திருநெல்வேலியில் மழை பெய்தாலே இங்கு விழிப்புணர்வாக இருக்க வேண்டும். தாமிரபரணி ஆறு ஸ்ரீவைகுண்டம் வழியாகத்தான் வருகிறது. எனவே தென்பகுதியில் உள்ளவர்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். கயத்தாரில் உள்ள தண்ணீரும் உப்பாறு ஓடைக்குதான் வருகிறது. வீடுகள் இழந்தவர்களுக்கு, படகுகளை இழந்தவர்களுக்கு தனியாக திட்டம் உள்ளது. மீட்பு பணிகளை முடிப்பதற்கே 15 நாட்கள் ஆகிவிட்டது. காப்பீடு செய்யப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சரிசெய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் நிறைய குடும்பங்கள் வாழ்வாதாரமே இழந்துள்ளார்கள். ஒவ்வொரு துறையாக ஆலோசனை செய்திருக்கிறோம். அவர்களுக்கு என்னென்ன திட்டங்களில் என்னென்ன பயன்கள் இருக்கிறது என்று தெரியாமல் இருக்கலாம். அதுதொடர்பான வேலைகள்தான் இப்போது செய்து வருகிறோம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஸ்வர்ணலதா மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர  நிறுவனப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.