சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை – அரசியலுக்குள் சிக்காமல் மக்களுக்கு பயன்பட வேண்டும்
G.H
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.136.35 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 637 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இன்று(07.03.2026)திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்துள்ளார். இது தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். ஆனால் நடைமுறையில் இது உண்மையான “சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை”யாக செயல்படுமா என்ற கேள்விதான் இப்போது முக்கியமாக எழுந்துள்ளது.
இந்த மருத்துவமனை மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியகிரம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. மொத்த செலவான ரூ.136.35 கோடியில் 60 சதவீதத்தை மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், மீதமுள்ள 40 சதவீதத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. அதாவது இந்த திட்டம் மத்திய-மாநில இணைப்பு திட்டமாகும்.
தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் பொதுவான சிகிச்சைகள் தற்போது கிடைத்து வருகிறது என்றாலும், இதய நோய், நரம்பியல், சிறுநீரக நோய், புற்றுநோய், விபத்து சிகிச்சை போன்ற உயர் தர சிகிச்சைகளுக்கு மக்கள் இன்னும் வெளியூரையே நாட வேண்டிய நிலையே உள்ளது. பலர் சிகிச்சைக்காக மதுரை, திருவனந்தபுரம் என்று வேறு நகரங்களுக்கு சென்று சிகிச்சை பெறும் நிலை தொடர்கிறது. அதனால் தான் இந்த மருத்துவமனை தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்பட்டது.
ஆனால் இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட சர்ச்சைகள்தான் பல கேள்விகளை எழுப்பின. முதலில் இது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அல்ல, மகப்பேறு மருத்துவமனையாக மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியானது. இதனால் தூத்துக்குடியில் அரசியல் சூழ்நிலை சூடுபிடித்தது. தெற்கு மாவட்ட பா.ஜ.க உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களையும் நடத்தின.
ஒரு முக்கியமான கேள்வி அப்போது எழுந்தது. பல கோடி ரூபாய் செலவில், பல்வேறு உயர் சிகிச்சைகளுக்காக கட்டப்பட்ட மருத்துவமனை ஏன் திடீரென வேறு நோக்கத்திற்கு மாற்றப்பட வேண்டும்? இது மருத்துவ தேவையா? அல்லது அரசியல் கணக்கா? என்ற கேள்விக்கு தெளிவான பதில் கிடைக்கவில்லை.
இப்போது அந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் அதே மருத்துவமனை மீண்டும் “பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை” என்ற பெயரிலேயே திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆனால் திறப்பு விழாவே ஒரு மருத்துவமனையின் வெற்றியை நிரூபிக்காது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
மருத்துவமனை கட்டிடம் மட்டும் இருந்தால் போதாது. அதற்குள் வேலை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், பராமரிப்பு அமைப்பு ஆகியவை இருந்தால்தான் அது உண்மையான மருத்துவமனையாக செயல்படும். மருத்துவ உபகரணங்கள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், அவற்றை இயக்க தேவையான பணியாளர்கள் முழுமையாக நியமிக்கப்பட்டுள்ளனரா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
அதனால் இங்கு எழும் முக்கியமான கேள்வி இது: இந்த மருத்துவமனை உண்மையில் முழு சேவையுடன் செயல்படுமா? அல்லது சில பிரிவுகள் மட்டும் செயல்படும் “பேருக்கு மட்டும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி” மருத்துவமனையாக மாறுமா?
இன்னொரு அரசியல் சந்தேகத்தையும் சிலர் முன்வைக்கின்றனர். இந்த திட்டத்தில் மத்திய அரசின் பங்கு அதிகம் இருப்பதால் அதற்கான புகழ் அரசியல் ரீதியாக வேறு தரப்பிற்கு சென்றுவிடக் கூடாது என்ற மனநிலை ஏதேனும் இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுகிறது. இந்த சந்தேகம் உண்மையா பொய்யா என்பது முக்கியமல்ல. ஆனால் இத்தகைய சந்தேகங்கள் எழாத அளவிற்கு அரசு செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
மக்களின் உயிர் பாதுகாப்பு என்பது அரசியல் போட்டிக்கான கருவி அல்ல. அது அரசுகளின் அடிப்படை பொறுப்பு. தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு இந்த மருத்துவமனை உண்மையான உயிர்காக்கும் மையமாக மாறினால் அது அரசியல் வெற்றி அல்ல – மனிதநேய வெற்றி.
ஆகவே, திறப்பு விழாவால் மட்டும் கடமை முடிந்துவிடாது. இந்த மருத்துவமனை முழுமையான வசதிகளுடன், போதுமான மருத்துவர்களுடன், அனைத்து உயர் சிகிச்சைகளும் கிடைக்கும் வகையில் செயல்படுவதை உறுதி செய்வதே மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டிற்கும் உண்மையான பொறுப்பாகும். அதுதான் மக்களுக்கு செய்யப்படும் உண்மையான சேவை.
nadunilai.com