அதிமுக ஒற்றுமைக்காக 10 நாள் அவகாசம் – எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுத்த செங்கோட்டையன்
ADMK NEWS
“பிரிவினை இல்லை… அனைவரும் சேர வேண்டும் ஜெயலலிதா போலத் தியாகம் செய்யத் தயார்”
அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் நிலையைப் பற்றி விரிவாக கருத்து தெரிவித்தார். அவர், “அதிமுகவில் எந்தவிதமான பிரிவினையும் இல்லை. பிரிவு செய்யும் எண்ணமோ திட்டமோ எதுவும் எங்களிடம் இல்லை. ஆனால், கட்சிக்குள் உள்ள குழப்பங்கள் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும். இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் அவகாசம் வழங்குகிறோம். அந்த காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அடுத்த கட்ட முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்” என்று எச்சரித்தார்.
1977 சட்டமன்றத் தேர்தலை நினைவுகூர்ந்த செங்கோட்டையன், “எம்.ஜி.ஆர் என்னை நேரடியாக போட்டியிட வைத்தார். அப்போது மக்கள் மனதில் எம்.ஜி.ஆர் மீது இருந்த அன்பே என்னை வெற்றி பெறச் செய்தது. அவரின் பெயரை மட்டும் சொன்னாலே மக்கள் நம்பிக்கை கொள்வார்கள். அந்த அன்பும் நம்பிக்கையும் தான் எனக்கு அரசியலில் முன்னேற்றம் கொடுத்தது” என்றார்.
“அதிமுகவைப் பிளக்கும் எண்ணம் எதுவும் எங்களிடம் இல்லை. மாறாக, பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைத்து, ஒரே மேடையில் செயல்படச் செய்வதே எங்கள் நோக்கம். கட்சியின் வலிமை ஒற்றுமையில்தான் இருக்கிறது. அதற்காக எடப்பாடி பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
“மக்களுக்காக தேவையான எந்தத் தியாகத்தையும் நான் செய்யத் தயார். ஜெயலலிதா மக்களுக்காக போராடி தியாகம் செய்தார்; அதேபோல நானும் மக்களுக்காக சேவை செய்யத் தயங்கமாட்டேன். கட்சியின் நலனுக்காக நான் எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன்” என செங்கோட்டையன் தெரிவித்தார்.
செங்கோட்டையன் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை, அதிமுக அரசியலில் புதிய அலைகளை எழுப்பியுள்ளதாகக் கருதப்படுகிறது. அடுத்த 10 நாட்களில் எடப்பாடி பழனிசாமி எவ்வாறு செயல்படுகிறார் என்பதே கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடும் என்று வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
எதிர்க்கட்சிகள் : “அதிமுகவில் நாளுக்கு நாள் சிக்கல்கள் அதிகரிக்கின்றன. மக்கள் பிரச்சனைகளை விட, உள்ளிருப்பு சண்டைகளில் மூழ்கிக் கிடக்கிறது” என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
கட்சிக்குள் எதிர்வினை : சில முன்னணி தலைவர்கள், “செங்கோட்டையன் முன்வைத்த கோரிக்கைகள் நியாயமானவை. அனைவரையும் ஒன்றிணைக்க உடனடி நடவடிக்கை அவசியம்” என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், இன்னும் சிலர் அமைதியை கடைப்பிடித்து வருகின்றனர்.
அதிமுகவில் ஒற்றுமையை வலியுறுத்தும் குரல்கள் பலமாக எழுந்து வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமி அடுத்த 10 நாட்களில் எப்படிப் பதிலளிக்கிறார் என்பது அரசியல் ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுல்ளது.
nadunilai.com