புதுக்கோட்டையில் போக்குவரத்து முடக்கத்திற்கு எதிராக பொதுமக்கள் மறியல், கலெக்டரிடம் மனு கொடுத்து போராட்டம்
High Way News
நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை புதுக்கோட்டையில் மேம்பாலத்தை நீட்டிப்பு செய்து முடங்கியுள்ள போக்குவரத்தை மீண்டும் தொடர நடவடிக்கை வேண்டும் என்பதை வலியுறுத்தி கீழ கூட்டுடன்காடு கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் இறங்கினர். தொடர்ந்து அவர்கள் அவர்கள் இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை ஊரை சுற்றி கூட்டாம்புளி, மேலகூட்டுடன்காடு, நடுக்கூட்டுடன்காடு, கீழகூட்டுடன்காடு, சிறுப்பாடு, திருமலையாபுரம், சூசைபாண்டியாபுரம் உள்ளிட்ட சுமார் 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் தினசரி இங்கு வந்து செல்கின்றனர். கடந்த காலங்களில் திருநெல்வேலி-தூத்துக்குடி இடையே இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் புதுக்கோட்டை பழைய பாலம் வழியாக புதுக்கோட்டை ஊருக்குள் வந்து சென்றன. ஊருக்கு வெளியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு பாயிண்ட் டு பாயிண்ட் என்கிற இடைநில்லா பேருந்துகள் தவிர மற்ற பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து சென்றன. ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக மேம்பாலம் கட்டி, பயன்பாட்டிற்கு வந்த பிறகு திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் எந்த பேருந்துகளும் புதுக்கோட்டை ஊருக்குள் வருவதில்லை. அதற்கான வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.
தூத்துக்குடியில் இருந்து நெல்லை, ஸ்ரீவைகுண்டம், சாயர்புரம் உள்ளிட்ட வழித்தடத்திற்கு செல்லும் பேருந்துகள் மட்டும் தற்போது புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்கின்றன. ஆனால் திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், செக்காரக்குடியில் இருந்து தூத்துக்குடி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் எந்த பேருந்துகளும் புதுக்கோட்டை ஊருக்குள் வருவதில்லை. அந்த பேருந்துகள் புதுக்கோட்டைக்கு வெளியிலேயே பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிடுகின்றன. பகல் ஆனாலும் நள்ளிரவு ஆனாலும் அதே நிலைதான் இருந்து வருகிறது. வயதான முதியோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள்,மாணவ,மாணவியர் என அனைவருமே ஒவ்வொரு நாளும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன.
இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு என்பது நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுக்கோட்டை மேம்பாலத்தை நீட்டிப்பு செய்து, கீழ கூட்டுடன்காடு பஸ் ஸ்டாப் மற்றும் போஸ்ட் ஆபிஸ் சாலையை இணைக்கும் வகையில் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் யூனியன் ஆபீஸ் அருகே இருப்பது போல் புதிய வழித்தடம் அமைக்க வேண்டும். இதன் மூலமே போக்குவரத்து சீராகும். கீழகூட்டுடன்காடு பகுதி மக்கள் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்லவும், புதுக்கோட்டையில் இருந்து வெளியில் செல்லவும் மேம்பாலத்தில் கூடுதல் வழித்தடம் மிகவும் அவசியமாக இருக்கிறது. எனவே மேம்பாலத்தை நீட்டிப்பு செய்து அதன் அடிப்பகுதி மேலும் ஒரு வழித்தடம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதிக அளவில் விபத்துக்கள் நடைபெறுகிறது என்கிற காரணத்திற்காக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திறந்த வெளி பாதை அடைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக சென்று வந்த கீழ கூட்டுடன்காடு பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நெல்லை மார்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் வரமுடியவில்லை. இப்போது கீழகூட்டுடன்காடு பகுதி மக்கள் புதுக்கோட்டை ஊருக்குள் செல்ல முடியாமல் அடைபட்டுள்ளனர். எனவே காலம் தாழ்த்தாமல் திருநெல்வேலி, திருவைகுண்டம் மற்றும் செக்காரக்குடி,பேரூரணி,கூட்டுடன்காடு உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் பேருந்துகள், புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்வதற்கு வசதியாகவும், கீழ கூட்டுடன் காடு உள்ளிட்ட அப்பகுதி மக்கள் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர வசதியாகவும் நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுக்கோட்டை மேம்பாலத்தை நீட்டிப்பு செய்து, கீழ கூட்டுடன்காடு பஸ் ஸ்டாப் மற்றும் போஸ்ட் ஆபிஸ் சாலையை இணைக்கும் வகையில் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் யூனியன் ஆபீஸ் அருகே இருப்பது போல் புதிய வழித்தடம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் கீழ கூட்டுடன் காடு, அய்யனார் காலனி, அய்யனார் காலனி கீழ்பகுதி,ராஜீவ்நகர், ஐயப்பன்நகர்,யூகோநகர் உள்ளிட்ட பகுதி மக்கள் ஒன்று திரண்டு திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்ய திரண்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த புதுக்கோட்டை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக வாக்குறுதி அளித்தனர். அதனை ஏற்று மறியலை கைவிட்ட பொதுமக்கள், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர். இதில் கீழ கூட்டுடன்காடு, அய்யனார் காலனி, அய்யனார் காலனி கீழ்பகுதி,ராஜீவ்நகர், ஐயப்பன்நகர்,யூகோநகர் பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ரவிதாகூர் உள்ளிட்டோர் இருந்தனர்.
nadunilai.com