மின்னணு வாக்குப் பதிவு இயந்திர விவகாரம் குறித்த வழக்கு - தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

EVM

மின்னணு வாக்குப் பதிவு இயந்திர விவகாரம் குறித்த வழக்கு - தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கையின்போது VVPAT ஒப்புகை சீட்டுகளையும் 100 சதவிகிதம் சரிபார்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ADR மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனுமீது நடந்த விசாரணைகளின்போது, ஐரோப்பிய நாடுகள் மீண்டும் வாக்குச் சீட்டுக்கு முறைக்கே திரும்பிவிட்டன என மனுதாரர் தரப்பு கூறியபோது, `இந்தியாவின் மக்கள்தொகை அதிகம். இப்போது வாக்குச் சீட்டு நடைமுறை என்பது சாத்தியமற்றது' என்று கூறியது உச்ச நீதிமன்றம்.

அதேபோல், `மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மூன்று தனித்தனி மைக்ரோகன்ட்ரோலர்கள் இருக்கிறது. அவற்றை ஒருமுறை மட்டுமே புரோகிராம் செய்யமுடியும், ரீ-புரோகிராம் செய்ய முடியாது' என தேர்தல் ஆணையம் தரப்பு கூறியபோது, `தொழில்நுட்ப ரீதியாகத் தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசியலமைப்பின் ஒரு அதிகார அமைப்பான தேர்தல் ஆணையத்தின் மீது நாங்கள் அதிகாரம் செலுத்த முடியாது. எனவே தேர்தல்களை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது' என ஏற்கனவே கூறியிருந்தது உச்ச நீதிமன்றம்.  இந்தநிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தீர்ப்பை வாசித்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, ``அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம். இந்த வழக்கில் இரண்டு விதமான தீர்ப்புகளை நாங்கள் வழங்குகிறோம். ஒன்று, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் ஏற்றும் பணி முடிந்ததும், சின்னம் ஏற்றுதல் அலகு (Symbol Loading Unit) சீல் வைக்கப்பட வேண்டும். பின்னர், சீல் வைக்கப்பட்ட அந்த யூனிட் குறைந்தபட்சம் 45 நாள்களுக்குப் பாதுகாப்பாக வைக்கபடவேண்டும்.

மற்றொன்று, தேர்தல் முடிவில் சந்தேகம் இருந்தால், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த வேட்பாளர்களின் கோரிக்கையின் பேரில் அந்தத் தொகுதியின் 5 சதவிகித மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்கள் பொறியாளர்கள் குழுவால் சரிபார்க்கப்படும். குறிப்பாக, இந்தக் கோரிக்கையைத் தேர்தல் முடிவுகள் வெளியான ஏழு நாள்களுக்குள் வேட்பாளர்கள் முன்வைக்க வேண்டும். மேலும், இதற்கான செலவை விண்ணப்பதாரர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறு இருந்தால் அவை திருப்பியளிக்கப்படும்.

ஒரு அமைப்பை கண்மூடித்தனமாக நம்பாமலிருப்பது தேவையில்லாத சந்தேகங்களுக்கு வழிவகுக்கும். இன்னொருபக்கம், EVM-ல் வாக்குகள் எண்ணும்போது ஒப்புகைச் சீட்டுகளில் பார் கோடு (Bar Code) இருக்கிறதா என்பதை தேர்தல் ஆணையம் பரிசோதிக்க வேண்டும். எனவே, இந்த வழக்கின் கோரிக்கையை நடைமுறையில் உள்ள நெறிமுறை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பதிவில் உள்ள தரவுகளின் அடிப்படையில் நிராகரிக்கிறோம்'' என்று தீர்ப்பளித்தார்.