கொலை வெறிபிடித்த நாய்களிடமிருந்து மக்களை காப்பாற்ற வேண்டியது அவசியம்
Dog News
பூமியில் பிறந்த அத்தனை உயிர்களுக்கும் ஆசா பாசம் உண்டு. ஆனால் அதில் வேறுபாடுகள் உண்டு. அதுபோல் அத்தனை உயிர்களுக்கும் வாழ்க்கையை நடத்த வழிகள் உண்டு. அதிலும் உயிர்களுக்கு தக்க வேறுபாடுகள் உண்டு. நாம் மனிதர்களாக இருப்பதால், மனிதனில் இருந்து மற்ற உயிர்களை பார்க்கிறோம். ஆனால் மற்ற உயிர்கள் அப்படித்தான் பார்க்கிறது என்பதற்கு எந்த உதாரணமும் இருக்க போறதில்லை. மனிதனையே பார்க்காத காட்டு விலங்குகள் திடீரென மனிதனை பார்த்துவிட்டால் பீதியாகிவிடுவதுண்டு. அதுவே வீட்டில் உள்ள விலங்குகள், மனிதனோடு கொஞ்சி உறவாடுவதுண்டு. காட்டு விலங்குகளை காட்டு விலங்காவும் வீட்டு விலங்கை வீட்டு விலங்காகவும் மட்டும் வைத்து பார்த்தால் அதனதன் குணம் அதனதனோடு இருக்கும். ஆனால் அவைகள் இடமாறும் போதுதான் பிரச்னை வருகிறது. சில மேலை நாட்டினர் வெவ்வேறு குணமுள்ள விலங்குகளை இணைத்து புதுவகையான விலங்குகளை உருவாக்கி மகிழ்கின்றனர். அப்படி உருவாக்கபடும் நாய்களின் குணத்தை மக்கள் கணிக்க முடிவதில்லை. அப்படிப்பட்ட நாய்களால்தான் இப்போது நாடெங்கும் பிரச்னை.
கடந்த சில காலமாகவே காட்டு விலங்குகள் போல் தெருநாய்கள் ஆவேசத்துடன் காணப்படுகிறது. முன்பெல்லாம் யார் வீட்டிலாவது வளர்க்கபடும் நாய்கள்தான் தெருக்களில் சுற்றிவிட்டு வீட்டிற்கு சென்றுவிடும். ஆனால் சமீப காலமாக தெருக்களிலேயே பிறந்து தெருக்களியே வாழும் நாய்கள் பெருகி வருகிறது. வீட்டில் மட்டுமே உணவு கிடைக்கும். அப்படி இருக்கும் போது வீட்டு நாய்கள் மட்டுமே பிழைக்க முடியும். ஆனால் இப்போது தெருக்களில் கொட்டப்படும் சிக்கன் கழிவுகள், மாமிச மிச்சங்கள், ஹோட்டல் கழிவுகள் போன்றவை தெருவில் பிறக்கும் நாய்களுக்கு கிடைக்கிறது. அதனால் அவைகள் வளர்கின்றன. சாமானியர் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு அவர்கள் சாப்பிடும் உணவையே கொடுப்பர். ஆனால் ரோட்டில் சுற்றி திரியும் நாய்கள் மாமிச கழிவுகளை தினசரி சாப்பிட்டுவிடுகிறது. ஏற்கனவே ஏகத்திற்கும் பரவியிருக்கும் கலப்பு சாதி நாய்கள் காட்டு விலங்குகளின் குணத்தை ஒத்திருக்கின்றன. அப்படிப்பட்ட நாய்கள்தான் காட்டு விலங்குகள் போல் மொத்த மொத்தமாக கிளம்பி தெருக்களில் படையெடுக்கின்றன. கண்டவர்களையெல்லாம் கடித்து குதறுகிறது. அதனால் ஏற்படும் நோயால் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்திருக்கின்றனர், பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று புள்ளி விபரங்கள் கூறுகிறது. தெரு நாய்களின் ஆவேச கடியை சமூக வலைதளங்கள் மூலம் பார்க்கும் மக்கள் கொதிப்படைகின்றனர். மேலும் அதில் பாதிக்கப்பட்டோரின் கொதிப்பு சாதாரணமாக ஒதுக்கி வைக்க கூடியதில்லை. எனவே பாதிக்கப்பட்டோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர். அதன் பிறகு நீதிமன்றம் செல்கின்றனர். நீதிமன்ற ஆலோசனையின் படி தெரு நாய்களின் கடியிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கக தெரு நாய்களை பிடித்து முகாம்களில் அடைத்து வைப்பது, அதன் பெருக்கத்தை தடுக்க கருத்தடை செய்வது என்பன உள்ளிட்ட நடவடிக்கைகளில் அரசுகள் முனைப்பு காட்டும்போது, நாய்கள் மீது பாசம் கொண்ட ஆர்வலர்கள் அதற்கு தடையாக இருக்கின்றனர். அவர்கள் கூறும் காரணங்களும் சரியாகத்தான் தெரியும். ஆனாலும் மக்களை தெருநாய்களிடமிருந்து பாதுகாப்பது அரசின் கடமையாக உள்ளது. பொதுமக்கள், பாதிக்கப்பட்டோர், அரசு, நீதிமன்றம், விலகுகள் நல ஆர்வலர்கள் என பல தரப்பும் தெருநாய்கள் குறித்த விவாதத்தில் இருந்து வருகின்றன.
சமூக வலைதளங்கள் முழுவதும் இதே விவகாரம் விஸ்பரூபம் எடுத்துள்ளது. இதுக்கிடையே விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியிலும் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. தெரு நாய்களுக்கு எதிராகவும், ஆதரவாகவும் விவாதங்கள் நடந்தது. நாய்களால் பாதிக்கபட்டோர்களுக்கு மத்தியில் நாய்கள் நல ஆர்வலர்கள் கூறும் கருத்துக்கள் ஏற்க முடியாததாக இருந்ததால் அதற்கு எதிராக நீயா நானா கோபிநாத் கூட கருத்து தெரிவித்துள்ளார். அதனால் அவரின் கருத்துக்களை ஆதரித்தும், எதிர்த்தும் இப்போது சமூக வலைதளங்கள் மெசேஜ் சூடு பறக்க பறந்து கொண்டிருக்கின்றன.
கூட்டம் கூட்டமாக தெருக்களில் சுற்றும் நாய்கள் சிறு குழந்தைகளை தாக்கும் வீடிக்களை பார்க்கும் எந்த ஒரு மனிதனும் இதுபோன்ற நாய்களுக்கு எதிராகத்தான் பேசுவார்கள். ஆனால் அது தவறு என்று வாதாடுவோர் விநோதமாகத்தான் பார்க்கபடுவார்கள். இதுதான் எதார்த்தம். நாய்கள் பசியாக தெருக்களில் சுற்றுகிறது என்பதற்காக பிஸ்கெட் போட்டுவிட்டு சிலர் நிம்மதியாக போய்விடுவர். அந்த நாய் அடுத்தவர்களிடமும் அதுபோல் எதிர்பார்க்கும். வீட்டுக் கட்டுப்பாடு, மக்களோடு கூடி பழகும் வாய்ப்பு கிடைக்காத தெருநாய்களுக்கு மனிதன் கூட மாமிசமாகத்தான் தெரிவான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உயிர்களோடு அன்பு செலுத்த வேண்டும் என்கிற மனிதாபிமானம் ஒவ்வொரு மனிதனோடும் இருக்க வேண்டியது அவசியம்தான். அதுக்காக இடையூறுகளை தவிர்க்க முறைப்படுத்த கூடாது என்று வாதிடுவதில் நியாமில்லை.
தடை செய்யப்பட்ட காட்டு விலங்குகள் தவிர வீடுகள் தோறும் நாய்கள், பூனைகள் என எந்த விலங்குகளையும் வளர்க்கலாம். அது அந்த வீட்டில் உள்ளவர்கள் சார்ந்தது. அது தெருவில் வந்து மற்றவர்களை துன்புறுத்த கூடாது. வீட்டில் நாய்கள் வளர்க்க கூடாது என்று யாரும் கூறப்போறதில்லை. அரசு அனுமதியுடன் எத்தனை நாய்களையும் வீட்டில் வளர்க்கலாம். அதேவேளை யாரோட கட்டுபாடும் இல்லாமல் தெருவில் சுற்றி திரியும் கொலைகார நாய்களை அப்புறப்படுத்துவதில் என்ன தவறு இருந்துவிட போகிறது. இந்த விவகாரத்தில் மனிதாபிமானம் பொங்கும் விலங்குகள் நல ஆர்வலர்கள் கொலைகார நாய்களுக்கு ஆதரவாக பேசுவது மிக பெரிய தவறாகும். நாய்களை அடிக்க கூடாது, கொல்ல கூடாது என்று சட்டம் இருக்கலாம். ஆனால் அதை முறைப்படுத்தும் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் முட்டுக்டட்டை போடுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதுதான் நடுநிலையாளர்களின் கேள்வியாக இருக்கிறது.
எனவே வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் அந்தந்த வீட்டில் உள்ளோரின் பொறுப்பு சார்ந்தது. வீட்டிற்குள் வந்தவரை கடித்துவிட்டது என்றால் அது அவர்கள் சம்பந்தபட்ட விசயம் என்று ஏற்றுக் கொள்ளலாம். அந்த நாய்கள் வெளியில் வந்து தெருவில் செல்வோரை கடித்தால் அது வீட்டில் உள்ளோரின் பொறுப்புதான். தெருக்களில் சுற்றும் எந்த நாய்களும் தெருநாய்கள் என்றே கருதப்பட வேண்டும். அத்தகைய நாய்களை பொதுமக்களிடமிருந்து விலக்கி வைக்க வேண்டியது அவசியம். எனவே அவைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை.அதேவேளை நாட்டு நாய்கள் அழிந்து போகாதபடியும் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- சரவணப்பெருமாள் சுப்பிரமணியன்
8056585872
nadunilai.com