புதுக்கோட்டையில் அடிக்கடி நடக்கும் விபத்துக்கள் - அலட்சியம் காட்டும் அரசு துறை
High Way News
தூத்துக்குடி - திருநெல்வேலி இடையிலான தேசிய நெடுஞ்சாலையின் புதுக்கோட்டை பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பது வழக்கமாகிவிட்டது. நேற்று இரவில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ரோடு கிராஸில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது என்பதற்காக புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கபட்டது. ஆனால் இப்போதும் விபத்துக்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேம்பாலத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் ரோட்டில் உள்ள சர்வீஸ் ரோடு மற்றும் பிரதான ரோடு சந்திக்கும் இடத்தில்தான் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. உயிர் பலியை தடுக்க அரசு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்று தொடர் விபத்துக்கள் நடந்திருக்காது. குறிப்பிட்ட அந்த சந்திப்பில் செல்லும் போது வாகன ஓட்டிகள் குழப்பமடைவதாக கூறுகிறார்கள். அதனை அதிகாரிகள் கண்டு கொள்வதாக தெரியவில்லை. அந்த பகுதியில் வைக்கப்படும் பேரி கார்டுகள் விபத்துக்களை தடுப்பதற்காகவா அல்லது விபத்துக்களை ஏற்படுத்துவதற்காகவா என்று கேள்வி கேட்கும் வகையில்தான் வைக்கப்படுகிறது.
புதுக்கோட்டை பகுதி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்ட பிறகு நெல்லை, திருவைகுண்டம் மற்றும் செக்காரக்குடி உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்லாமல் மெயின் ரோட்டிலேயே நின்று சென்றுவிடுகிறது. ஊருக்குள் வந்து செல்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் முறையாக செய்யவில்லை என்று ஏற்கனவே புகார்கள் கூறப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று (29.08.2025) இரவு குறிப்பிட்ட அந்த ரோடு கிராஸ் பகுதியில் நெல்லை கேடிசி நகரை சேர்ந்த அரசதுரை, பாளை மார்க்கெட் பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்கிற இரண்டு பேரும் தூத்துக்குடியில் எலக்ட்ரிக், பிளம்பிங் வேலையை முடித்துவிட்டு ஒரு பைக்கிள் திருநெல்வேலி நோக்கி சென்ற போது புதுக்கோட்டை அய்யனார் காலனி என்கிற அந்த பகுதியில் சிலிண்டர் லாரியும் பைக்கும் மோதி ஏற்பட்ட விபத்தில் அரசதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆகாஷ் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, சத்திரகுடி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜவேல் இப்போது கைதி ஆகியுள்ளார்.
எனவே இதுபோன்று தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று வரும் விபத்துக்களை தடுக்க அரசு துறை நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துவரும் நிலையில் இப்படி மேலும் ஒரு விபத்து நடந்து ஒருவர் இறந்துள்ளார் என்கிற தகவல் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த மேம்பாலத்தை நீட்டிப்பு செய்து, அதன் கீழ் பகுதியில் புதிய வழி அமைக்க வேண்டும். முறையாக சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். அதற்கு, மத்திய, மாநில அரசு துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாகும். தொடர்ந்து நடந்து வரும் விபத்துக்களுக்கு சம்பந்தபட்டவர்கள் மட்டுமே காரணம் என்று கருதமுடியாது. அத்தகைய சூழ்நிலை உருவாகுவதற்கு அரசு நிர்வாகத்தின் அலட்சியமும் காரணம் என்கிறார்கள் அப்பகுதி பொதுமக்கள். இந்த நிலை தொடருமானால் விபத்துக்களின் பட்டியலை வைத்து நீதிமன்றம் செல்வதற்கு தயாராகி வருகின்றனர் சமூக ஆர்வலர்கள். அப்போது அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் அலட்சியம் வெளியில் பேசப்படும் நிலை நிச்சயம் வரும் என்று தெரிகிறது.
nadunilai.com