மத்திய பட்ஜெட் 2024 ஒரு பார்வை - கல்வியாளர் டாக்டர் கே.சுதா
budget 2024
"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு" என்ற திருக்குறளுக்கேற்ப, பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன் என்பதற்கேற்ப, மத்திய பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வளர்ச்சியையும், மக்கள் நலனையும் சார்ந்த, பல அற்புதமான திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து ஏழாவது முறையாக, நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து, புதிய வரலாறு படைத்திருக்கிறார்.
▪️ஒரு நாட்டின் வளர்ச்சியில், பெண்களின் பங்கு இன்றியமையாதது என்பதை உணர்த்த, மகளிருக்கு இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த அரசு, தற்போது, பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் திட்டங்களுக்காக, ரூ. 3 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
▪️கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ. 2.66 லட்சம் கோடி நிதியும், வேளாண்மைத் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இளைஞர்கள் திறனை மேம்படுத்த உயர் வசதிகளுடன் 1,000 தொழில்துறை திறன் வளர்ப்பு மையங்கள், திறன் கடன் திட்டம் சீரமைக்கப்பட்டு, மத்திய அரசு நிதி பாதுகாப்போடு ரூ.7.5 லட்சம் வரை கடன் பெற வழிவகை, அமைப்பு சார் நிறுவனங்களில், புதிதாகப் பணியில் சேரும் அனைத்து இளைஞர்களுக்கும், ஒரு மாத ஊதியம், அரசு சார்பில் நிதியுதவி, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 20 லட்சம் இளைஞர்களுக்கு, திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கும், திறன் மேம்பாட்டுத் திட்டம், நாட்டிலுள்ள 500 முன்னணி நிறுவனங்களில், 1 கோடி இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகையுடன் பயிற்சிப் பணி, பிற மாநிலங்களுக்குச் சென்று பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, அரசு, தனியார் பங்களிப்பில் குறைந்த செலவில் தங்குமிடம் போன்ற அறிவிப்புகள் உள்ளது.
▪️தொழில் முனைவோருக்கான முத்ரா கடனுதவித் திட்டம் மூலம் வழங்கப்படும் கடன் தொகையின் உச்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக அதிகரித்திருக்கிறது.
▪️கல்வித் துறைக்கு, ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில், ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.
▪️சூரிய ஒளி தகடுகள் அமைக்கும் திட்டத்தின் மூலம், 1 கோடி வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம், மின் பற்றாக்குறை குறைவதோடு, சூரிய ஒளி மின்சார உற்பத்தியும் அதிகரிக்கும்.
▪️புற்று நோயாளிகள் பயன்பெறும் வகையில், மேலும் மூன்று மருந்துகளுக்கு வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
▪️தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி, 15% லிருந்து 6% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
▪️நகர்ப்புறப் பகுதியில் வசிக்கும் 1 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு, ரூ.10 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டித் தரப்படும்.
▪️மாநிலங்களுக்கான வரிப் பங்கீடு, ரூ. 20.99 லட்சம் கோடியிலிருந்து, ரூ.23.49 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.
நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு முதல், ஒவ்வொரு துறையின் வளர்ச்சியையும் கவனமாகக் கருத்தில் கொண்டு, அனைத்துத் தரப்பினருக்குமான மிகச் சிறந்த நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது. வரும் 2047 ஆம் ஆண்டிற்குள், உலக அரங்கில் முதன்மை நாடாக, நமது நாடு வளர்ச்சியடைய வேண்டும் என்ற, பிரதமரின் குறிக்கோளை நோக்கிய இந்த நிதிநிலை அறிக்கையை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்துள்ளார்.
- கல்வியாளர் Dr.K. சுதா