தூத்துக்குடியில் பிஷப், ஆதீனத்தை அழைத்து ஆதரவு கேட்ட மு.க.ஸ்டாலின்

M.K.Stalin

தூத்துக்குடியில் பிஷப், ஆதீனத்தை அழைத்து ஆதரவு கேட்ட மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடியில் பிஷப், ஆதீனத்தை அழைத்து தேர்தலில் வெற்றி பெற செய்ய ஆதரவு கேட்டிருக்கிறார் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். 

தூத்துக்குடி மக்களவை தேர்தலையொட்டி திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று தென் மாவட்டங்களான தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் கனிமொழியையும், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி, ஆகியோரை ஆதரித்து எட்டையாபுரம் - சிந்தலக்கரை பகுதியில் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தூத்துக்குடிக்கு வந்திருந்தார். 

முன்னதாக தூத்துக்குடி அருகே உள்ள சத்யா ரிசார்ட்ஸ்ல் தங்கியிருந்தார். அப்போது அவரிடம் மதம் சார்ந்த பிரமுகர்கள் அழைத்து வரப்பட்டனர். அதில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த திருநெல்வேலி திருமண்டல பேராயர் பர்னபாஸ் தலைமையில் குருவானவர்களும், தூத்துக்குடி  - நாசரேத் திருமண்டல லே செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், உபதலைவர் தமிழ்செல்வன், குருத்துவ செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்றக், திருமண்டல மேல்நிலைப்பள்ளி மேலாளர் பிரேம்குமார், ராஜாசிங் ஆகியோரும், இந்து மதத்தை சேர்ந்த பெருங்குளம் செங்கோல் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்ய ஞான பரமாச்சார்ய சுவாமிகள், கன்னியாகுமரி அய்யாவழி பால பிரஜாதிபதி அடிகளார்,  தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் தலைமை அர்ச்சகர் கல்யாணசுந்தரம் என்ற செல்வம்பட்டர், வைகுண்டபதி பெருமாள் திருக்கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்ட ராமன், உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். அவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு கேட்டார்.

அப்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், அமைச்சர்கள் மனோதங்கராஜ், தங்கம் தென்னரசு, தமிழக சிறுபான்மை ஆணையர் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.