தமிழகம் முழுவதும் தொடரும் மின்வெட்டு...இரவில் தூங்க முடியாமல் மக்கள் அவதி!
TNEB NEWS
தமிழகம் முழுவதும் தொடரும் மின்வெட்டு... இரவில் தூங்க முடியாமல் மக்கள் அவதி! காரணம் என்ன? அரசு விளக்கம் அளிக்குமா?
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் தூங்க முடியாமல் சிரமப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மின்தடையை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு திருச்சி உள்ளிட்ட சில பகுதிகளிலும் மின்வெட்டை கண்டித்து பெண்கள் உள்பட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, தமிழகத்தில் மின்தடை தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், மின்வெட்டுக்கான உண்மையான காரணம் என்ன? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மின்வெட்டு தொடர்பாக மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஏற்கனவே அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் மின் தேவை, குறைந்த மின்னழுத்தம் மற்றும் திடீர் மின்தடை குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், சீரமைப்புப் பணிகளால் சில இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், மின்வாரியத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் பணிகள் தொடர்பாகவும் அமைச்சர் நிர்மல் குமார் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கான காரணங்கள் குறித்து அரசு ஆய்வு செய்து வருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மின்வெட்டு தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் அளித்த விளக்கத்தில், கோடை வெப்பம் காரணமாக மின் தேவை அதிகரித்ததாகவும், அதனால் மக்கள் அதிக அளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் அவசியம் உள்ளது. அதற்கேற்ப மின் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், கடந்த ஆட்சியில் மின்சாரப் பகிர்மானத்துக்கான பணிகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்றும், கூடுதல் மின்சாரத்தை விநியோகிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். சென்னையில் சுமார் 3,500 மெகாவாட் மின்சாரத்தை பயன்படுத்துவதற்கான கட்டமைப்பு இருந்த நிலையில், பயன்பாடு 5,000 மெகாவாட் அளவுக்கு சென்றதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் சுழற்சி முறையில் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்படுவதாக நேற்று(11-ம் தேதி)வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மின் பராமரிப்புப் பணிகளுக்காக பல பகுதிகளில் திட்டமிட்ட மின்தடையும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் திட்டமிட்ட மின்தடை மற்றும் திடீர் மின்தடை ஆகிய இரண்டையும் பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு தரப்பில் மின் தேவை அதிகரிப்பு, குறைந்த மின்னழுத்தம், மின் விநியோகக் கட்டமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டாலும், பொதுமக்களின் கேள்வி வேறாக உள்ளது. மின்வெட்டு ஏற்படுவதற்கான சரியான காரணம் என்ன?, எத்தனை மணி நேரம் மின்தடை ஏற்படும்?, இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு எப்போது கிடைக்கும்? என்பதை அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் வீடுகளில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், மின்வெட்டு காரணமாக சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, தமிழகம் முழுவதும் நிலவும் மின்தடை குறித்து மின்துறை சார்பில் விரிவான விளக்கத்தை அரசு வெளியிட்டு, எப்போது இந்தப் பிரச்னை முழுமையாக சரியாகும் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
nadunilai.com