ஸ்ரீவை வடகால் கடை மடை வரை தண்ணீர் திறந்துவிட கோரிக்கை - தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மறியல்
Agri news
ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனப் பகுதிக்கு பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து முழுமையான அளவில் தாமிரபரணி தண்ணீர் திறந்து விடக் கோரி, ஸ்ரீவைகுண்டம் வடகால் கடைமடை பாய்மான விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனப் பகுதிக்கு பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து முழுமையான அளவில் தாமிரபரணி தண்ணீர் திறந்து விடக் கோரி, ஸ்ரீவைகுண்டம் வடகால் கடைமடை பாய்மான விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை அருகே தட்டப்பாறை விலக்கில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் குலையன்கரிசல் விவசாயிகள் சங்க தலைவர் ஹேம்நாத் ஜெகன்,கூட்டாம்புளி தலைவர் பட்டு முருகேசன், சேர்வைக்காரன் மடம் தலைவர் தங்கதுரை, கோரம்பள்ளம் விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் சுந்தரபாண்டி, அத்திமரப்பட்டி முள்ளக்காடு முத்தையாபுரம் விவசாயிகள் சங்க தலைவர் பூபதி நாடார், மற்றும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி ஆகியோர் தலைமையில் விவசாயிகள் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் தூத்துக்குடி யூனியன் முன்னாள் துணை சேர்மன் ஆஸ்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தண்ணீர் கேட்டு பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனப் பகுதியில் சுமார் 12 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்துள்ளோம். ஆனால், போதுமான அளவில் தண்ணீர் திறந்து விடப்படாததால் பேய்குளம், பொட்டைக்குளம், கோரம்பள்ளம் குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்கள் வறண்டு, சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகி விட்டது. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களும் பாதிக்கப்பட்டதுடன், கால்நடைகளுக்குக் கூட குடிநீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கருகி வரும் பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும். ஏற்கனவே அதிகாரிகள் அளித்த உறுதியின்படி தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
தூத்துக்குடி கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் ஆறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தியும், உண்ணாவிரத போராட்டம் நடத்தியும் கால் வாய்களில் தண்ணீர் விடப் படாததால் கடைமடை பகுதிகள் வரை முழுமையான பாசன வசதி கிடைக்காமல், பயிர்கள் தொடர்ந்து வறட்சியால் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வேதனையுடன் உள்ளோம். எனவே தமிழக அரசு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
சாலை மறியல் போராட்டம் நடத்துவது குறித்து வால்போஸ்டர்கள் தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி ஏ.எஸ்.பி. சஞ்சித் நாயர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்த போலீசார், புதுக்கோட்டையில் உள்ள சத்யா மஹாலில் தங்க வைத்தனர்.
nadunilai.com