மீளவிட்டானில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு – புதிய கட்டிடத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
TASMAC
தூத்துக்குடி, செப்.27:
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் 700-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என்றும், தொடர்ந்து படிப்படியாக மேலும் கடைகள் மூடப்படும் என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடைகள் மூடப்பட்ட நிலையில், தூத்துக்குடி அருகே புதிய இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளதாக பரவிய தகவல் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே மீளவிட்டான் பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட உள்ளதாக இன்று தகவல் பரவியது. இதையடுத்து மீளவிட்டான், பண்டாரம்பட்டி, சில்வர்புரம், பாளையபுரம், சுப்பிரமணியபுரம், விஎம்எஸ் நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
புதிய கட்டிடத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், “இந்த பகுதியில் டாஸ்மாக் கடை வேண்டாம்” என கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், இந்தப் பகுதியில் சர்ச் மற்றும் இந்து கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் உள்ளதாகவும், ஏராளமான பள்ளி மாணவர்கள் தினமும் இந்தப் பகுதி வழியாக பள்ளிகளுக்கு சென்று வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், வேலைக்குச் செல்லும் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களும் இந்த வழித்தடத்தை அதிகளவில் பயன்படுத்தி வருவதாகவும், இத்தகைய சூழலில் இங்கு மதுபானக் கடை அமைப்பது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, மீளவிட்டான் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்றும், பொதுமக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு கடை திறக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் கடை உண்மையில் இங்கு திறக்கப்பட உள்ளதா, அதற்கான அனுமதிகள் பெறப்பட்டுள்ளனவா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே மக்கள் வசிக்கும் பகுதியில் புதிதாக மதுபானக் கடை அமைக்கப்படுவதாக பரவிய தகவல் மீளவிட்டான் பகுதியில் எதிர்ப்பை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
nadunilai.com