ஒரு டாஸ்மாக் கடையை அடைத்தால்.. அப்பகுதியில் பல மொபைல் டாஸ்மாக் கடைகள் திறக்கிறது..

Tasmac News

ஒரு டாஸ்மாக் கடையை அடைத்தால்.. அப்பகுதியில் பல மொபைல் டாஸ்மாக் கடைகள் திறக்கிறது..

எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பார்கள். அந்த எதிர்வினை அதுபோலவே தீங்கு தருவதாக இருந்தால் என்ன செய்வது?. அப்படித்தான் இருக்கிறது டாஸ்மாக் கடைகள் அடைத்த பகுதியில் பல மொபைல் டாஸ்மாக் கடைகள் திறந்து சரக்கு விற்பனை நடைபெறும் செயலை பார்க்கும் போது. 

போதை பொருள்கள்தான் சகல பிரச்னைகளுக்கும் காரணம் என்று கிட்டத்தட்ட அனைவருக்குமே தெரிகிறது. அதை தெரிந்துதான் அரசு நிர்வாகமே போதை கொடுக்கும் மதுவை விற்பனை செய்கிறது. முறைப்படுத்தி விற்பதற்கு பெயர் டாஸ்மாக் மது விற்பனை என்கிறது அரசு. குடி மக்களின் பைக்குள் இருந்து பிடுங்கும் கோடிக்கணக்கான பணம் அரசு நிர்வாகம் இயக்குவதில் ஒரு பங்கு வகிக்கிறது என்பது கூட ஒரு செய்திதான். மதுவில் பழகிவிட்டவர்கள் இப்போது கஞ்சா உள்ளிட்ட மற்ற போதை பொருட்களை பயன்படுத்த பழகிவிட்டனர். இப்போது அரசு கூட போதை பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க முடியவில்லை. பல்வேறு வழிகளில் அதை தடுத்து வருகிறது. 

தற்போதுள்ள தவெக அரசு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு 700க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளை முதற்கட்டமாக மூடியிருக்கிறது. மீத முள்ள கடைகளை  படிப்படியாக மூடிவிடுவோம் என்கிறார்கள். இது நல்ல விஷயம்தான் என்றாலும் கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதையாக அடைக்கப்பட பல டாஸ்மாக் கடைகள் இருந்த பகுதியில் அனுமதியில்லாமல் மது விற்பனை நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே சுற்றி திரியும் நபர்கள் பைக்கிள் சரக்கை பதுக்கி வைத்துக் கொண்டு கேட்போருக்கு விற்பனை செய்து வருகின்றனர். செல்போன் மூலம் அழைக்கும் நபர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்றுவிடுகிறது மது பாட்டில்கள். அப்படி விற்பவர்களின் எண்ணிக்கை கணக்கில்லாமல் பெருகி வருகிறது. முன்பு டாஸ்மாக் கடைக்கு சென்றால்தான் மது பாட்டில் வாங்க முடியும் என்கிற நிலமை மாறி இப்போது இருக்கும் இடத்திலேயே கிடைக்கும் நிலை ஏற்பட்டிருப்பதால் மது பிரியர்கள் குடித்துவிட்டு கும்மாளம் போடுவது அதிகமாகிவிட்டது. இரவு 9 மணிக்கே பொதுமக்கள் வீட்டிற்கு சென்றுவிட வேண்டும் என்கிற மனநிலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறு வயது மதுபிரியர்கள் நடுரோட்டில் செய்யும் அடாவடியை கண்டு பெரியவர்கள் அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டிருப்பதை நேரடியாக பார்க்க முடிகிறது. 

மதுக்கடைகள் இருந்த இடத்தில் இப்போது யாரும் மது விற்கவில்லை என்று அப்பகுதி காவல்துறை அதிகாரிகள் உறுதியாக, மனசாட்சியோடு சொல்ல தயாராக இருக்கிறார்களா? என்று கேள்வி கேட்கிறனர் சமூக ஆர்வலர்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்ட பகுதியில் மது விற்பனை நடக்கிறதா என்பதை தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய், ஸ்பெசல் பார்டியை வைத்து சோதிக்க வேண்டும். குறிப்பிட்டு இந்த பகுதியில் நடக்கிறது என்று அதன் எல்லையை சுருக்கிவிட விரும்பவில்லை. முதலமைச்சர் காவல்துறையை நல்ல எண்ணத்துடன் நம்புகிறார். அவர் நம்புவது போல் காவல்துறையினர் நடந்து கொள்கின்றனரா என்பதை சோதித்து பார்க்க வேண்டும். 

மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனையை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். எந்த பகுதியில் போதை பொருட்கள் விற்பக்கப்பட்டது? யார் விற்றது ? என்று காவல்துறைக்கு தெரியும். அப்படியானால் இப்பவும் அங்கே விற்கப்படுகிறது என்றால் அதற்கு யார் பொறுப்பு என்பதை அரசும், அரசு நிர்வாகமும் நினைத்து பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள்.