3 மாதங்கள் தொடர்ந்து உணவு பொருள் தரம் சோதனை - தூத்துக்குடி ஆட்சியர் தகவல்
Thoothukudi
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு சேவை நிறுவனங்களிலும் சுகாதாரம், உணவுப் பொருள்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கடந்த 1ம் தேதி முதல் நவ.30-ம் தேதி வரை 3 மாதங்கள் சிறப்பு ஆய்வு நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷுமகாஜன் தெரிவித்திருகிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு சேவை நிறுவனங்களிலும் சுகாதாரம், உணவுப் பொருள்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கடந்த 1ம் தேதி முதல் நவ.30-ம் தேதி வரை 3 மாதங்கள் சிறப்பு ஆய்வு நடைபெறுகிறது. உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களில் சுகாதார நடைமுறைகள், உணவுப் பொருள்களின் தரம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து அப்போது ஆய்வு செய்யப்படும்.
அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-இல் குறிப்பிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை முறையாகப் பின்பற்றி, தரமான, சுத்தமான மற்றும் பாதுகாப்பான உணவுப் பொருள்களை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். ஆய்வின்போது சட்ட விதிகளை மீறி தரமற்ற முறையில் உணவுப் பொருள்கள் தயாரிப்பது அல்லது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட உணவு வணிகர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு அலுவலர்களின் சரிபார்ப்பு பட்டியலைப் பதிவிறக்கம் செய்து, தங்களது நிறுவனங்களில் சுய தணிக்கை மேற்கொண்டு, ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவற்றை முன்கூட்டியே சரிசெய்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
nadunilai.com