தூத்துக்குடி அருகே அண்ணன், தம்பி கொன்று புதைப்பு - காரணம் குறித்து போலீஸ் விளக்கம்
Thoothukudi Police
தூத்துக்குடி மாவட்டம், தெர்மல்நகர் அருகே கோவில்பிள்ளை நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்கு பாண்டியன், அருள்ராஜ், வேல்முருகன் என மூன்று மகன்களும், மூன்று மகள்களும் உண்டு. இதில் மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. மகன்களில் வேல்முருகன் தவிர மற்றவர்களுக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த 28ம் தேதி அருள்ராஜ் திடீரென காணாமல் போயிருக்கிறார். அவரைத் தேடி பாண்டியன் சென்றுள்ளார். இரண்டுபேருமே வீடு திரும்பவில்லையாம். சகோதரர்கள் இருவர் காணாமல் போனது குறித்து வேல்முருகன் தெர்மல்நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று பண்டுகரை ஓடை பகுதியில் நாய்கள் கூட்டம் கூடி சண்டையிட்டு கொண்டிருந்ததை கவனித்த அப்பகுதி மக்கள், அதனருகே சென்று பார்த்தனர். அப்போது அங்கே ஒரு கை வெளியில் தெரிந்த நிலையில் ஒருவர் புதைக்கப்பட்டிருப்பதை கண்டனர். இதில் ஏதோ விபரீதம் இருக்கிறது என்பதை அறிந்த அப்பகுதியினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு வந்து பார்த்தனர். தாசில்தார், வி.ஏ.ஓ, காவல்துறையினர் முன்னிலையில் இன்று குழி தோண்டப்பட்டது. காணாமல் போன அருள்ராஜ் மற்றும் பாண்டியன் உடல்கள் அடுத்தடுத்து அதிலிருந்து வெளியே வந்தன. இருவரையும் யாரோ கொன்று ஒரே குழிக்குள் புதைத்து வைத்திருப்பது தெரியவந்தது. கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் கஞ்சா கும்பல் குறித்த தகவல்களை போலீசாரிடம் தெரிவிக்க உள்ளதாக கூறியதால் ஆத்திரமடைந்த கஞ்சா கும்பல் அவர்களை கொலை செய்து புதைத்திருக்கிறது என்று சில செய்தி சேனல்களில் செய்தி வெளியானது. ஆனால் அதனை மறுக்கும் மாவட்ட காவல்துறை, இவ்வழக்கின் எதிரியான தூத்துக்குடி கோவில்பிள்ளை நகரைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் ரிதன் (25) என்பவரின் சகோதரர் தற்கொலை செய்து கொண்டதில் அவரது உறவினர்களான கொலையான இருவர்கள் தான் காரணம். ரிதனுக்கும் கொலையானவர்களுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. அதாவது முன்விரோதம் காரணமாகவே கொலை சம்பவம் நடந்துள்ளது. இறந்து போன நபர்கள் கஞ்சா தகவல்கள் குறித்து காவல்துறைக்கு எந்த விதமான தகவல்களும் தெரிவிக்கவில்லை. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதுதொடர்பாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று மாவட்ட போலீஸ் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் குறித்த தகவல்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மிகுந்த தலைவலியை கொடுத்து வரும் நிலையில், கஞ்சா குறித்த பிரச்னையால் அண்ணன், தம்பியின் உடல்கள் ஒரே குழிக்குள் இருந்து மீட்கப்பட்டது என்கிற செய்தி பெரிய அதிர்வை ஏற்படுத்திவிடும் என்கிற காரணத்தால் காவல்துறை இப்படியொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது என்று தெரிகிறது.
nadunilai.com