சிபிஐ அதிகாரிகள் என கூறி மூதாட்டியிடம் ரூ.50 லட்சம் அபேஸ் செய்த 3 பேர் கைது

crime

சிபிஐ அதிகாரிகள் என கூறி மூதாட்டியிடம் ரூ.50 லட்சம் அபேஸ் செய்த 3 பேர் கைது

தூத்துக்குடியை சேர்ந்த மூதாட்டி ஒருவரிடம் சிபிஐ அதிகாரிகள் என கூறி ரூ.50 லட்சம் வரை அபேஸ் செய்த 3 பேர் கைது செய்யபட்டுள்ளனர். 

தூத்துக்குடியை சேர்ந்த மூதாட்டியிடம் வாட்ஸ் அப் கால் மூலம் தொடர்பு கொண்ட மூன்றுபேர், தங்களின் மும்பை வங்கி கணக்கில் மனித கடத்தல் மூலம் இரண்டு கோடி வரையில் பணம் பரிமாற்றம் நடந்துள்ளது. அதனால் உங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. எனவே உங்களை கைது செய்ய உள்ளோம். அவ்வாறு கைது செய்யாமல் இருக்க, ரூ.50 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுகிறோம் என்று வாட்ஸ் அப் மூலமே தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியான மூதாட்டி அவர்கள் கேட்ட ரூ.50 லட்சம் பணத்தை அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துவிட்டார். பின்னர் அதெல்லாம் மோசடி என்பதை அறிந்த மூதாட்டி  NCRP ல் புகார் செய்தார். 

அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சகாயஜோஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி மற்றும் போலீசார் மேற்படி வங்கி கணக்தொடர்புடைய பணப் பரிமாற்றங்களை ஆராய்ந்து தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த பள்ளி ராமு மகன் பள்ளி பரமேஸ்வரராவ் (28),விஜயவாடா பகுதியை சேர்ந்தவர்களான சங்கர் ராவ் மகன் சுகந்திபதி சந்திரசேகர்(40) மற்றும் ஜெகன்மோகன் ராவ் மகன் ஆடும்சுமில்லி சிவராம் பிரசாத்(43) ஆகியோர் குறிப்பிட்ட அந்த வங்கி கணக்கை கையாண்டு வந்தது, பண மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து குற்றபிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட மூவரையும் பிடித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  

மேலும் அவர்கள் வைத்திருந்த 6 செல்போன்கள், ஏடிஎம் கார்டுகள், வங்கி கணக்கு அட்டைகள் போன்றவற்றை பறிமுதல் செய்த குற்றபிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இது போன்று சிபிஐ, காவல்துறை அல்லது கஸ்டம்ஸ் அதிகாரிகள் என வாட்ஸ் அப்பில் வீடியோ, ஆடியோ கால் மூலம் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடி நடைபெற்று வருகிறது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற அழைப்புகளை உடனடியாக துண்டித்துவிடவும், மேலும் சைபர் குற்ற புகார்களுக்கு உடனடியாக புகார் எண் 1930 அல்லது  cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளித்து விழிப்புடன் செயல்பட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.