தூத்துக்குடி: இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதையாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்து – 3 பேர் பலி
Accident
தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலை அருகே, இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதையாத்திரையாக நடந்து சென்ற பக்தர்கள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் சிலர் காயமடைந்தனர்.
திருச்செந்தூர், வீரபாண்டிபட்டணம் பகுதியை சேர்ந்தவர்கள் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலுக்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் பாத யாத்திரையாக செல்வது வழக்கம். அதுபோல் இந்தாண்டும் நூற்றுக்கு மேற்பட்டோர் கிளம்பினர். இன்று மாலை தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலை பகுதியில் அவர்கள்
நடந்து சென்றபோது கார் ஒன்று அவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராமமூர்த்தி மனைவி சுந்தர ராணி (வயது 60), வடிவேல் மனைவி இசக்கியம்மாள் (வயது 55), கீழ திருச்செந்தூர், கரம்பாவிளையைச் சேர்ந்த சுந்தரம் மனைவி கஸ்தூரி (வயது 55) ஆகிய 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு வந்த ஓட்டபிடாரம் போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தனர்.விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. விபத்துக்குக் காரணமான காரின் ஓட்டுநரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயரமான விபத்து, பாதையாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, மேலான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
nadunilai.com