திமுக–அதிமுக கூட்டணி இல்லை, திமுக - பாஜக கூட்டணி உண்டோ?
DMK - BJP
சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. மகா, மெகா கூட்டணி வலிமையுடன் இருந்த திமுக இப்போது தனிமரமாக நிற்கிறது. தமிழகத்தின் நம்பர் ஒன் கட்சி என்று பார்க்கப்பட்ட அதிமுகவில் இருந்து பலரும் பிய்த்துக் கொண்டு வெளியேறிய நிலையில் அதன் சக்தியை கட்சியினரே கணிக்க முடியாத நிலையில் இருக்கிறது அதிமுக. அண்ணாமலை தலைமையில் பாஜக முக்கிய இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கபட்ட தமிழக பாஜகவோ அண்ணாமலையை வெளியேற்றியது வெற்றியா, தோல்வியா என்று கணிக்க முடியாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. வெற்றிக்களிப்பில் உள்ள தவெக இன்னும் அவர்கள் உட்கார வேண்டிய சீட் எது என்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். ஆக மொத்தம் கலங்கிய குட்டையாக இருக்கிறது தமிழக அரசியல் நிலவரம். இந்த நிலையில் திமுகவும், பாஜகவும் கூட்டணி அமைக்க போகிறது என்றும் கூட பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு திமுகவும், அதிமுகவும் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கப்போகிறது என்றும் பேசப்பட்டது. ஆனால் உள்கட்சிக்குள் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக இரண்டு கட்சிகளுமே மறுப்பு தெரிவித்துவிட்டு அமைதி காக்கின்றன.
இதுக்கிடையில் திமுகவும், பாஜகவும் கூட்டணி அமைக்கப்போகிறது என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. சமீப காலமாக திமுகவினரும், பாஜகவினரும் முட்டி மோதிக் கொள்வதை நிறுத்தியிருப்பதை வைத்து அதுவும் உண்மையாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவது இயல்புதான் அதற்கு அவர்கள், அரசியலில் நிரந்தர நண்பரும் கிடையாது, நிரந்தர எதிரியும் கிடையாது என்பார்கள்.
பாஜகவோடு திமுக இணக்கமாக செல்கிறது. அவர்கள் கூட்டணி வைக்க போகிறார்கள் என்கிற அர்த்தத்தில் தவெகவினர் அடிக்கடி பேசி வருகின்றனர். இதுக்கிடையே நேற்று முன் தினம் திமுக துணைப் பொதுச்செயலாளரான கனிமொழி எம்.பி.,மத்திய அமைச்சர் ஒருவரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். அப்போது அவர்கள் டீ பார்டியில் கலந்து கொண்டனர் என்று தவெகவினர் கூறிவருகின்றனர். இவர்களின் வாதப்படி பார்த்தால் திமுகவும், பாஜகவும் இணக்கம் காட்டுவதுபோல்தான் தெரிகிறது.
இந்த விவகாரம் பேசப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பியிடம் திமுக - அதிமுக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்க, அதற்கு கனிமொழி, திமுக–அதிமுக கூட்டணி என்பது தமிழக வெற்றிக் கழகத்தின் கனவாக இருக்கலாம், அதற்கு நிச்சயமாக வாய்ப்பில்லை என்றார். அங்கு அவர் மேலும் பேசும்போது, தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டுகள் எழும்போது, அவர்களைப் பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. குற்றச்சாட்டுகள் வந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதோ, கைது செய்வதோ நடைபெறுவதில்லை. தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசை எதிர்ப்போம் என்று தமிழக வெற்றிக் கழகத்தினர் கூறி வருகின்றனர். ஆனால், இதுவரை மத்திய அரசை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரோ, அமைச்சர்களோ எந்தக் கேள்வியையும் எழுப்பியதாக எனக்கு நினைவில்லை. இரண்டு நாள்களுக்கு முன்பு கனிம வளம் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் உரிமைகளையும், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வருவாயையும் பெரிய அளவில் பாதிக்கக்கூடியது. எந்தவிதமான விவாதமும் இல்லாமல் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்துக்கூட தமிழக வெற்றிக் கழக அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
எதிர்ப்போம், எதிர்ப்போம் என்று வாய்வார்த்தையாக கூறுகிறார்களே தவிர, தமிழகத்தைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளில் மத்திய அரசை எதிர்த்து எதையும் அவர்கள் பேசுவதில்லை என்பதுதான் உண்மை. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அந்தத் திட்டங்களை நீட்டித்திருப்பது நிச்சயமாக வாழ்த்துக்குரியது. திமுக–அதிமுக கூட்டணி என்பது தமிழக வெற்றிக் கழகத்தின் கனவாக இருக்கலாம். நிச்சயமாக அதற்கு வாய்ப்பில்லை என்றார் திட்டவட்டமாக. ஆனாலும் அவர் வேறு ஒரு இடத்தில், நாங்கள் இப்போது இண்டியா கூட்டணியில் இல்லை என்று கூறியிருப்பதையும் வைத்து பார்க்கும்போது திமுக–அதிமுக கூட்டணி இல்லை, ஆனால் திமுக - பாஜக கூட்டணி உண்டு என்பதுபோல் தெரிகிறது. மேலும், பெரிய அளவில் பாஜகவை திமுகவினர் விமர்சிப்பதையும், திமுகவினரை பாஜகவினர் விமர்சிப்பதையும் சமீபகாலமாக பார்க்கமுடிவதில்லை என்றார்கள் அரசியல் விமர்சகர்கள்.
nadunilai.com