தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு இருளில் பேருந்து நிறுத்தங்கள் - கூடுதல் விளக்குகள் அமைக்க கோரிக்கை
Tuty collector office
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புள்ள பேருந்து நிறுத்தப் பகுதிகளில் இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால், பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் இருளில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ஆட்சியர் அலுவலகம் முன்பு மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், பேருந்து நிறுத்தம் அமைந்துள்ள இருபுறங்களிலும் போதுமான வெளிச்சம் இல்லாத நிலை காணப்படுகிறது.
அப்பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சில மின்விளக்குகளும் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும், இதனால் இரவு நேரங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேம்பாலப் பணிகள் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு கருதி கூடுதல் மின்விளக்குகள் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள போதிலும், தற்போதைய நிலையில் போதுமான அளவு விளக்குகள் இல்லை என பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புள்ள பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மேம்பாலப் பணிகள் நடைபெறும் இருபுறப் பகுதிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பழுதடைந்த மின்விளக்குகளை உடனடியாக சீரமைப்பதுடன், தேவையான இடங்களில் கூடுதல் மின்விளக்குகளையும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இதையே தகவலாக ஏற்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கூடுதல் தகவல் : ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிர் திசையில் உள்ள பேருந்து நிறுத்ததில் எந்தவித கூரை அமைப்பும் இல்லை. வெயில், மழை போன்ற நேரங்களிலும் மக்கள் அங்கு நின்றுதான் பஸ் ஏறிக் கொண்டிருக்கிறார்கள். பாலம் வேலை நடைபெறுவதால் நிரந்தர கூரை வசதி எதுவும் செய்து கொடுக்க முடியாது என்றாலும் தற்காலிக பஸ்நிறுத்தமாக எதாவது ஒரு கூடாரமாவது அமைத்து கொடுக்கலாம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சி அலுவலகம் முன்பே இப்படி இருள் இருக்கலாமா?
nadunilai.com