ஆக்ரோஷ வெறிநாய்களை கருணைக்கொலை செய்யலாம் - உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம்

DOG News

ஆக்ரோஷ வெறிநாய்களை கருணைக்கொலை செய்யலாம் - உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம்

மக்களின் குடும்ப உறவுகளில் ஒன்றாக பழகிவிடுகிறது வளர்ப்பு நாய்களும், பூனைகளும். அவைகளின் கண்களில் பாசம் நிறைந்திருந்தாலும் பற்களில் விசம் இருப்பதை நாம் அதன் மீது வைத்துள்ள பாசத்தால் மறந்துவிடுகிறோம். அதுபோலவே தெருநாய்களையும் ஆர்வலர்கள் ஆதரித்து வருகின்றனர். அதெல்லாம் நாய்கள் மூலம் பாதிப்பு ஏற்படாத காலங்கள் வரை சரிதான். தெருவில் வளரும் நாய்கள், அதுபோல் தெருவிலும், வீட்டிலுமாக வளரும் நாய்கள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் செயல்படுகின்றன. வீட்டில் மட்டுமே வளர்க்கப்படும் நாய்கள் வீட்டிற்குள் யாராவது சென்றால்தான் கடிக்க வரும். ஆனால் ரோட்டிலும், வீட்டிலுமாக வளரும் நாய்கள் தெருவில் போனாலே கடிக்கும் என்கிற நிலை இருக்கிறது. பொதுவாக நாய்கள் காவலுக்கு பயன்படுத்தப்படுவதால் அதன் பணியே மற்றவர்களை அச்சுறுத்துவதுதான். அதுவே ரோட்டில் சும்மா போகிற, வருகிறவர்களையெல்லாம் கடித்து குதறிவிடுகிறது. இதனால் உயிர் பலியாகிவிடுகிறது. நாய்கள் சூழ்ந்துகொண்டு சிறுவர், சிறுமிகளை கடித்து குதறுவது போன்ற வீடியோக்கள் ஒவ்வொருவர் நெஞ்சையும் பதை பதைக்க வைத்துவிடுகிறது. நாய்கள் இப்படி கொடூரமாக நடந்து கொள்வதற்கு செயற்கையாக கலப்பு இனத்தை உருவாக்குவது மற்றும் நாய்க்கு வெறிபிடித்துவிடுவது என்று சொல்கிறார்கள். அப்படியானால் இப்படிப்பட்ட வன்முறைக்கு முடிவு வேண்டும் என்பதுதான் பொதுநலவாதிகளின் வாதம். இதற்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

இதற்கிடையே விலங்கின ஆர்வலர்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் எதிர்ப்பு கொடுத்து வருவதால் நீதிமன்றம் மூலம் அதற்கு தீர்வு காண பலரும் முயன்றனர். அதன்விளைவாக தெருநாய்களை பிடித்து தடுப்பூசி போட்டு, காப்பகங்களில் அடைத்து வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதையும் தடுக்கும் வகையில் சில அமைப்பினர், தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து தடுப்பூசி போட்டுவிட்டு மீண்டும் பிடித்த இடங்களிலேயே கொண்டு விடும்படி உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டன. 

இந்த முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தெரு நாய்க்கடி சம்பவங்கள் மிகவும் தீவிரமானவை. அவற்றை எளிதில் கடந்துவிட முடியாது. தமிழகம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நாய்க்கடி சம்பவங்கள் இன்னும் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த 4 மாதங்களில் மட்டும், 2 லட்சம் நாய்க்கடி வழக்குகள் பதிவாகி உள்ளன. விமான நிலையங்களில் கூட நாய்க்கடி சம்பவங்கள் நடக்கின்றன. இது அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுகிறது. இது போன்ற காரணங்களால், பொது இடங்களில் இருந்து பிடிக்கப்பட்ட நாய்களை காப்பகங்களில் அடைக்க பிறப்பித்த உத்தரவை மாற்ற முடியாது. 

தெருநாய்களை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு முழுமையான செயல்பாட்டை கொண்ட விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையத்தை, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நிறுவ வேண்டும். இந்த மையங்களில் கருத்தடை மற்றும் அது சார்ந்த இதர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளும், பயிற்சி பெற்ற டாக்டர்களும் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநிலத்தின் மக்கள் தொகையை பொறுத்து, இந்த மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இந்த விலங்குகள் நல வாரியத்தின் விதிகளின்படி, இந்த மையங்கள் திறம்பட செயல்படுவதையும், விதிகளை அமல்படுத்துவதையும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். மேலும் வெறிநாய்க்கடி தடுப்பு மருந்துகள் போதிய அளவில் கையிருப்பில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். 

வெறி பிடித்த அல்லது ஆக்ரோஷமான தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மனிதர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்கவே இந்த நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்தின் வரம்பிற்குள் மட்டுமே இருக்க வேண்டும். 

நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகளை அமல்படுத்தும் பொறுப்பில் உள்ள நகராட்சி அதிகாரிகள், மாநில அரசுகள் மற்றும் பிற அமைப்புகளின் அதிகாரிகளுக்கு, உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கையாள்வதற்கு, குறிப்பிட்ட கால வரம்பிற்குள் உரிய நடவடிக்கைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதன் மூலம், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களில் இருந்து பிடிக்கப்படும் தெருநாய்களை மீண்டும் அதே இடத்தில் விட வேண்டிய அவசியம் இல்லை என்பதை நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது.