டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலக பொருளாதாரம் முதல் சர்வதேச பாதுகாப்பு வரை முக்கிய ஆலோசனை

BRICS

டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலக பொருளாதாரம் முதல் சர்வதேச பாதுகாப்பு வரை முக்கிய ஆலோசனை

புதுடெல்லி: இந்தியா தலைமையில் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு புதுடெல்லியில் இன்று 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. உலகின் முக்கிய வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் இந்த மாநாடு, தற்போதைய சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று 12-ம் தேதி டெல்லி வந்தடைந்தார்.

பிரிக்ஸ் அமைப்பு ஆரம்பத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளைக் கொண்ட BRIC அமைப்பாக உருவானது. பின்னர் தென்னாப்பிரிக்கா இணைந்ததையடுத்து BRICS என அழைக்கப்பட்டது. தற்போது எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் இணைந்துள்ளதால், அமைப்பு மேலும் விரிவடைந்துள்ளது. இந்த நாடுகள் உலக மக்கள் தொகையில் சுமார் பாதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

பிரிக்ஸ் மாநாட்டில், உலக பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு, சர்வதேச நிதி அமைப்புகளில் சீர்திருத்தம், எல்லை தாண்டிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பம், உலகளாவிய பாதுகாப்பு, போர் மற்றும் பிராந்திய மோதல்கள், பேரிடர் மேலாண்மை, முக்கிய விநியோகச் சங்கிலிகளை பாதுகாப்பது, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.

சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி உள்ளிட்ட உலகளாவிய நிதி அமைப்புகளில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பது பிரிக்ஸ் நாடுகளின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது. மேலும், நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில் உள்ளூர் நாணயங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது, குறைந்த செலவில் பாதுகாப்பான எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனை முறைகளை உருவாக்குவது உள்ளிட்ட முயற்சிகளும் கவனம் பெற்றுள்ளன.

மாநாட்டுக்கு முன்னதாக பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. சீன அதிபர் ஷி ஜின்பிங் டெல்லி வந்துள்ள நிலையில், இந்தியா–சீனா உறவுகள் தொடர்பான விவகாரங்களிலும் இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஈரான் தொடர்பான தற்போதைய மோதல் மற்றும் உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகளும் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான ஆலோசனைகளில் முக்கிய இடம் பெற்றுள்ளன. இந்த சூழலில், பிரிக்ஸ் நாடுகள் ஒரே நிலைப்பாட்டை உருவாக்குவது சவாலாக இருந்தாலும், சர்வதேச விவகாரங்களில் வளர்ந்து வரும் நாடுகளின் குரலை வலுப்படுத்துவது குறித்து இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. பிரிக்ஸ் நாடுகள் கூட்டு பிரகடனத்தை உருவாக்குவதில் உடன்பாடு எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்தவொரு குறிப்பிட்ட நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல், ஒருதலைப்பட்சமான போரை எதிர்ப்பது உள்ளிட்ட கருத்துகள் அதில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக அரசியலில் பலமுனை அணுகுமுறை வலுப்பெற்று வரும் நிலையில், இந்தியா தலைமையில் நடைபெறும் இந்த பிரிக்ஸ் மாநாடு, வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கை மேலும் வெளிப்படுத்தும் முக்கிய சர்வதேச நிகழ்வாக பார்க்கப்படுகிறது.