சொந்த கட்சியால்..கூட்டணி கட்சியால்.. காட்டிக் கொடுக்கப்பட்ட கதர்..?
Election news
அரசியல் என்றாலே சூழ்ச்சி நிறைந்ததுதான் மாற்றுக்கருத்தில்லை. அதற்காக சொந்த கட்சியையோ, கூட்டணி கட்சியையோ மாட்டி விட்டுதான் பதவியை பிடிக்க வேண்டுமா என்று கேள்வி கேட்கிறார்கள் நெட்டிசன்கள். தென் தமிழகத்தில் கதர் கட்சி வேட்பாளர் ஒருவர் பட்டபாடுதான் இது.
தேர்தலுக்கு முன்னரே அந்த கதர் கட்சிகாரரை வேட்பாளராக வரவிடக் கூடாது என்று பல பல வித்தகைகள் செய்து தடுத்து பார்த்தனராம் சொந்த கட்சியை சேர்ந்தவர்களும், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும். ஆனால் அவர் பணம் பத்தும் செய்யும் என்கிற திறமையை கொண்டு உச்சபட்ச செல்வாக்கை பயன்படுத்தி வேட்பாளராகிவிட்டார். வேறு வழியில்லை அவரை ஆதரித்துதான் ஆகவேண்டும் என்கிற நிலையில் ஆதரவு கரம் நீட்டியது அதே சொந்த கட்சி கூட்டமும், கூட்டணி கட்சி கூட்டமும். நம்பிய அந்த வேட்பாளருக்கு கடைசி நேரம் வரை காக்க வைத்து வேடிக்கை பார்த்தது அதே கூட்டம்.
வேறு வழி தெரியாமல் வேறு வழியில் முயற்சி செய்த அந்த வேட்பாளரின் நடவடிக்கைகள் அனைத்தும் அப்டேட் ஆனது அதிகாரவர்க்கத்திடம். அதனால் ஆயிரம் கண்களும் ஒரே புள்ளியை நோக்கி இருந்தது. எந்த திசையிலும் நகரமுடியாமல் தவித்த அந்த கதர் வேட்பாளர் கண்ணை மூடிக் கொண்டு கடைசி நேரத்தில் துணிந்து நடைபோட, அதை எதிர்முகாம் எடைபோட, அந்த திசைநோக்கி அதிகார வர்க்கம் வலைபோட சிக்கியது பெரிய பெரிய திமிங்கலம் அளவுள்ள மீன்கள்(?). அதனால் நிலைகுலைந்த கதர், செய்வதறியாது திகைத்து, எங்கோ ஒரு மூளையில் முடங்கியது.
கடந்த சில நாட்கள் வெயிலுக்குள் அங்குமிங்கும் அலைந்த கஷ்டத்தைவிட இந்த உள்கட்சி, கூட்டணி கட்சி துரோகம் பெரிய கஷ்டமாக போச்சு கதருக்கு. அரசியல் சூழ்ச்சி நிறைந்ததுதான், அதாவது சூழ்ச்சிகள் எல்லாம் நிறைந்ததுதான் அரசியல் என்று இப்போது புரிந்திருக்கிறது கதருக்கு.
இதையெல்லாம் தாண்டி மக்கள் தனக்கு ஆதரவு அளித்திருப்பார்கள் என்று நம்பி காத்திருக்கிறார் அந்த கதர்!
nadunilai.com