அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் மழைநீர் மேலாண்மையில் வெற்றி – மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு
N.P.Jegan
தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த சில ஆண்டுகளாக அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டதன் காரணமாக, மழைநீர் மேலாண்மையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், வெற்றி காணப்பட்டது எனவும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய அவர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, மழைக்காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். கடந்த காலங்களில் கனமழை பெய்யும் போது தேசிய நெடுஞ்சாலைகளில் தேங்கும் நீர் மாநகருக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், தற்போது புதிய மழைநீர் வழித்தடங்கள் அமைக்கப்பட்டதால் அந்த நிலை மாற்றம் கண்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
கடந்த ஆட்சிக் காலங்களில் மழை பெய்தால் பல பகுதிகளில் 45 நாட்கள் வரை நீர் தேங்கி நிற்கும் சூழல் இருந்ததாக சுட்டிக்காட்டிய மேயர், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 14 புதிய மழைநீர் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டதுடன், பக்கிள் ஓடை வழியாக நீர் கடலுக்கு செல்லும் வகையில் கட்டமைப்பு மேம்பாடுகள் செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதன் காரணமாக தற்போது 10 செ.மீ. மழை பெய்தாலும் இரண்டு மணி நேரத்திற்குள் நீர் முழுமையாக வடிந்து விடும் நிலை உருவாகியுள்ளதாகவும் கூறினார்.
மழைநீர் மேலாண்மை பணிகளில் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா தலைமையிலான நிர்வாகம், அமைச்சர்கள் கீதாஜீவன், நேரு, கனிமொழி எம்.பி., மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியதாக மேயர் பாராட்டினார்.
மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, வெள்ள பாதிப்பில்லாத பாதுகாப்பான மாநகரத்தை உருவாக்குவதே மாநகராட்சியின் முதன்மை நோக்கம் என்றும், தூத்துக்குடியை தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக மாற்ற அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
nadunilai.com