உரிமைத் தொகைபோல் ஆனது ஓட்டுக்காக வாங்கும் பணம் ?
Election news
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில், பல்வேறு வகையான மக்கள் ஒரே குடைக்குள் வாழ்வதும், தங்களுக்கான தலைமையை தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பதும் ஜனநாயக வெற்றியாகும். இது உண்மை என்றாலும் கூட உலகத்திற்கே நல்லறத்தை சொல்லிக் கொடுத்த நம்மிடையே ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் தீய புற்று வளர்ந்து வருவது தீமைக்கெல்லாம் தீமையாகும். சாதாரண சாமான்யனும் பதவிக்கு வரமுடியும் என்கிற ஜனநாயக கடமைகள் பணத்திற்காக விற்கப்படும்போது அங்கே மிதமிஞ்சிய பணம்படைத்தோரே பதவிக்கு வரமுடியும் அல்லது அவர் சார்பான நபரே பதவிக்கு வரமுடியும். அப்படித்தான் ஆகிக் கொண்டிருக்கிறது சமீபத்திய நிலமை. பதவிக்கு வருவதற்காக அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கும் ஆயுதம், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திட்டம். நமக்கும் நாட்டுக்கும் நல்லது செய்பவரை தேர்ந்தெடுக்கும் உரிமை, கடமையெல்லாம் வாக்காளர்களான மக்களுக்கு இருக்கிறது. ஆனால் அவர்களை பணம் கொடுத்தவர்களுக்கு ஓட்டுப்போட வேண்டுமே என்கிற நிலைக்கு தள்ளிவிட்டுவிட்டது இந்த அரசியல்வாதிகளின் குறுகிய பார்வை.
பதவிக்காக மாண்பு, மரியாதையை இழந்து பணம் கொடுத்து பதவியை பறிக்க வேண்டுமென வேட்பாளர் துணிந்து வரும் போது முதலில் மறுத்தும், பின்னர் ஒதுங்கி கொண்டும், அதன் பிறகு ஒத்துபோகும் நிலைக்கு வாக்காளர்களை தள்ளிவிடுகின்றனர். நாள்பட வாக்காளர்களே ஓட்டுக்கு பணத்தை எதிர்பார்க்கும் நிலை உருவாகிவிடுகிறது. மாதம்தோறும் வழங்கப்படும் உரிமைத் தொகைபோல் எதிர்பார்க்க துவங்கிவிட்டனர் பலர். அப்படியொரு நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் இது ஜனநாயக கேடு என்று வாதிடும் ஜனநாயக மாண்பை பாதுகாக்கும் வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஓட்டுக்கு பணம் கொடுப்பது தவறு, ஓட்டுக்கு பணம் வாங்குவது தவறு என்கிற எண்ணம் யாரிடமும் இருப்பதாக தெரியவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை கடமையாக கொண்டுள்ள வேட்பாளர்கள் இருக்கும் இடத்தில், ஓட்டுக்கு பணம் வாங்குவது உரிமை என்று எண்ணும் வாக்காளர்கள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. அடுத்த தெருவில் பணம் கொடுத்தவர்கள் எங்கள் தெருவிற்கு இன்னும் வரவில்லையே என்றும் பணம் கொடுப்பவர்களின் செல் நம்பரில் தொடர்பு கொண்டு எப்போது எங்கள் பகுதிக்கு வருவீங்க? எங்கள் வீட்டில் இத்தனை ஓட்டுக்கள் இருக்கிறது அதனால் எங்களுக்கும் பணம் கொண்டு வாருங்கள் என்று கேட்பதும், அப்படி ஒரு தரப்பிடம் பணம் வாங்கியதோடு நிற்காமல் அடுத்த தரப்பிடமும் கேட்டு வாங்கும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது. இதில் வெக்கம், மானம், மாண்பு என எதுவுமே பெரிதாக தெரியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு பணம் வாங்குவது தவறு என்பதே மறந்துபோச்சு.
எனவே உண்மையான ஜனநாயகம் எதிர்காலத்தில் இருக்க வேண்டும் என்றால் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க புதிய வழிமுறையை கண்டுபிடித்து முற்றிலும் தடுக்க வேண்டும். மக்கள் மனநிலையில் இருந்து அதை தூக்க வேண்டும். அப்போதுதான் நல்லவர்கள் வெற்றிபெறுவார்கள், நல்லது நடக்கும். இதேநிலை நீடித்தால் பணம் கிடைக்காதவர்கள் ஓட்டுப்போட வருவதற்கு அக்கறை கொள்ள மாட்டார்கள். பணம் வாங்குவதும், பணம் கொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டால் அதிலும் ஆயிரம் ஊழல்கள் ஏற்படும். இப்போதே பல இடங்களில் மேலே கொடுத்த பணத்தை பலர் கீழே கொடுக்காமல் பதுக்கிவிடுவதாக புகார் கூறப்படுகிறது. இப்படி செய்யக்கூடாத தவறிலும் கூட ஊழல் பெருகிவிடும். இந்த குறைகள், எதிர்காலத்தில் பெரிய அளவில் ஊழலை அங்கிகரிக்கும் நிலைக்கு வந்துவிடும். எனவே இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என்பது நியாயத்தை விரும்பும் நடுநிலை மக்களின் விருப்பமாகும்.
nadunilai.com