இலவசங்களுக்கு எதிராக வழக்கு - தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Supreme Court

இலவசங்களுக்கு எதிராக வழக்கு - தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

அரசியல் கட்சிகள் ஆட்சியை பிடிப்பதற்கு மக்களிடம் நன்மதிப்பை பெற்றாக வேண்டும். அப்படி நன்மதிப்பை பெற நாட்டின் நலன், நாட்டு மக்களின் நலன் என பொதுவான திட்டங்களை கூறுவது ஒரு வழி என்றால், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சலுகை அறிவிப்பது என்பது இன்னொரு வகை. அனைவருக்கும் பொதுவான திட்டங்களை அறிவிப்பது என்பது அனைவருக்கும் பொதுவானதாகும். இதைவிட தனி மனித சலுகை ஒவ்வொருவரையும் பிடித்துபோடும் கலை ஆகும். அந்த கலையைத்தான் சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் காட்டி வருகின்றன. 

அந்த கட்சி இந்த கட்சி என்று எந்த கட்சியையும் குறிப்பிட்டு கூறவேண்டியது இல்லை. தனி மனிதனை ஆசை காட்டுதல் ஒட்டு மொத்த நாட்டின் சிரத்தன்மைக்கு ஏற்றதல்ல என்பதை அறிந்த கட்சிகள் கூட அப்படி விளம்பரம் செய்கிறது. தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்துவிட்டு அரசு நிர்வாகத்திற்கு வந்தபிறகு அதனை நிறைவேற்ற முடியாமல் தவிப்பதை பார்க்கிறோம். லட்சக்கணக்கான கோடிகளை கடன் பெற்று மக்களை கடனாளியாக்குவதையும் பார்க்கிறோம். இந்த நிலை வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு கொடுத்தால் ஆசை தூண்டப்பட்ட சாமான்யன் அதற்கு எதிர்ப்பு கொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலை நாட்டு நலனுக்கு நல்லது அல்ல என்பதே பொதுவான கருத்தாகும். 

இந்தநிலையில் பட்டுலால் என்பவர் உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் மனுவில், மத்திய பிரதேச அரசின் நிலமை மிகவும் மோசமாக உள்ளது. ரிசர்வ் வங்கி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விபரங்களின்படி, ம.பி அரசுக்கு 2006-ல் 49,646 கோடி ரூபாய் கடன் இருந்தது. அது 2023 மார்ச்சில் 3.78 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 

நிலமை இப்படி இருக்க, தேர்தலுக்கு சில மாதங்கள் முன், நலத்திட்டம் என்கிற பெயரில் இந்த அரசுகள் பணத்தை வாரி வழங்க அனுமதிப்பது மிகப் பெரிய அராஜகம். ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு முன் இவ்வாறு நடக்கின்றன. அந்த நிதிச்சுமை முழுக்க வரி செலுத்தும் மக்கள் மீது விழுகின்றன. தேர்தலுக்கு முன் இலவசங்கள் அறிவிப்பது, அரசி நிதியில் இருந்து பணத்தை வாரி வழங்கி வாக்காளர்களை கவர்ந்திழுப்பது போன்ற செயல்கள் இந்திய தண்டனை சட்டப்பிரிவு, 171பி மற்றும் 171 சியின் கீழ் லஞ்சம் வழங்குதல் மற்றும் செல்வாக்கை தேவையற்ற முறையில் பயன்படுத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு ஒப்பாகும். 

தேர்தலுக்கு முன்னதாக மாநில முதல்வர்கள் வெளியிடும் அறிவிப்புகள் குறித்த விரிவான வழி காட்டுதல்களை நீதிமன்றம் உருவாக்க வேண்டும். சட்டசபையில் அனுமதி பெறாமல், இலவச மின்சாரம், குடிநீர் வழங்க, கடன் தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை. அந்த பணம், வரி செலுத்துவோருக்கு சொந்தமானது என்பதால் அதன் பயன்பாட்டை  கண்காணிக்கவும், கேள்வி கேட்கவும் அவர்களுக்கு உரிமை உள்ளது. இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டு உள்ளது. 

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பார்திவாலா,மனோஜ் மிஸ்ரா, அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசு, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச அரசுகள், தேர்தல் கமிஷன், ரிசர்வ் வங்கி ஆகியவை நான்கு வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டது.