மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க முதல்வர் விஜய் அதிரடி! மின்வாரிய தலைமை அலுவலகத்தில் திடீர் ஆய்வு
Cm news
சென்னை, செப்.23:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வரும் நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு முதலமைச்சர் விஜய் இன்று திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
முதல்வரின் இந்த திடீர் ஆய்வு மின்வெட்டு பிரச்னை தொடர்பாக தமிழக அரசின் கவனம் முழுமையாக திரும்பியிருப்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின் உற்பத்தி, மாநிலத்தின் தற்போதைய மின் தேவை, மின் விநியோகம் மற்றும் பற்றாக்குறை ஏற்படும் நேரங்களில் அதனை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் விஜய் கேட்டறிந்தார்.
மேலும், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான ‘மின்னகம்’ பகுதிக்கும் சென்று, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மின்தடை உள்ளிட்ட புகார்கள் எவ்வாறு பதிவு செய்யப்படுகின்றன, அவற்றுக்கு எவ்வாறு தீர்வு காணப்படுகிறது என்பதையும் அவர் ஆய்வு செய்தார். மின் உற்பத்தி மற்றும் பகிர்மான மையங்களின் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார்.
முதல்வரின் ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தமிழகத்தில் சுமார் 600 துணை மின் நிலையங்கள் தேவைப்படுவதாகவும், 6,000 டிரான்ஸ்பார்மர்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், நீண்ட காலமாக மேம்படுத்தப்படாத துணை மின் நிலையங்களில் மின் சுமையைத் தாங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டு டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைவதாகவும், சுமார் 20 ஆண்டுகள் பழமையான துணை மின் நிலையங்களை மேம்படுத்துவதற்கான திட்டம் முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அண்மையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் கூட நீண்ட நேரம் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் எழுந்துள்ளன. சில இடங்களில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் ஒரு நாளுக்கான மின் தேவை சுமார் 23,000 மெகாவாட் வரை உயர்ந்துள்ள நிலையில், பற்றாக்குறையை சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து தினசரி சுமார் 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, பராமரிப்புப் பணிகள் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களில் திட்டமிட்ட மின்தடைகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 23-ம் தேதியும் திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்திருந்தது.
தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான ஆட்சி அமைந்து சில மாதங்களே ஆன நிலையில், முதலமைச்சர் விஜய் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கே சென்று மின் உற்பத்தி மற்றும் விநியோக நிலவரத்தை நேரடியாக ஆய்வு செய்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
அதேவேளையில், தமிழக அரசுக்கு அரசியல் ரீதியாகவும் முக்கியமான காலகட்டமாக இது அமைந்துள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் பல்வேறு கட்சிகள் களத்தில் உள்ள நிலையில், மின்வெட்டு உள்ளிட்ட மக்கள் பிரச்னைகள் தேர்தல் பிரசாரங்களில் விவாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இதனால், மின்தடை பிரச்னைக்கு விரைவான தீர்வு காண்பது மின்வாரியத்துக்கு நிர்வாக ரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
முதல்வரின் இன்றைய நேரடி ஆய்வைத் தொடர்ந்து, மின் உற்பத்தி, மின் கொள்முதல், துணை மின் நிலையங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களின் பராமரிப்பு, மின்னகம் புகார்களுக்கு விரைவான தீர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் எந்த அளவுக்கு வேகமெடுக்கின்றன என்பதே அடுத்த கட்டத்தில் கவனிக்கப்படும் அம்சமாக உள்ளது.
nadunilai.com